Pages

Saturday 31 December 2011

இயற்கையில் எழிலானவள்


மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு
எனதாசை உளம்மீது வலம் வந்ததே
 கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே

வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு
குளமான தலைதன்னை குறைசொல்லுமே
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே

நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே

கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன
கனிநூறு பலதென்று மனம்நாணுமே

பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்

இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே

வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்

எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே

குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே


கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே

ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே


தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே

Tuesday 8 November 2011

காதல் கசந்தபோது.......

நிலவென்றேன் காதலும்கொண்டேன்-என்
நினைவெங்கு மவள் கண்டு நெஞ்சம் நிறைந்தேன்
பலமின்றி உயிர் வாடும் வேளை -அவள்
பெருவானில் தொலைவோடு பேசாது நின்றாள்

மலரென்று அவள் பேரைச்சொன்னேன் முழு
மனம்கொண்டு அவளோடு கதைபேசிநின்றேன்
இலதென்று துணை வேண்டும்போது -  அவள்
இதழ்மூடி முகிழாது ஏனோ கிடந்தாள்

கலையென்று அவள்எழில்கண்டேன்- என்
கனவான உளிகாணாச் சிலைநீயே என்றேன்
நிலையழிந் துழன்றிடும் நேரம்- அவள்
நெஞ்சமோ கல்லாக நின்றதைக் கண்டேன்

வலைகொள்ளும் விழிகயல் என்றேன் -அவள்
வதனத்தை கமலமென் மலரென்று சொன்னேன்
உலைந்துள்ளம் துயர் கொண்டவேளை -அவள்
ஓடுமீன் நடுவாவி எட்டாப் பூவானாள்

எழில்நடை அன்னமே என்றேன் -நீ
எழுந்தாடும் மயில் நடம் இடைதானுமென்றேன்
அழிகின்ற நிலைகொண்டபோதோ -அவள்
அசைந்தாடி மனமேடை அதிரநடம் செய்தாள்

குழலான மழைமேகமென்றேன் - அது
கொண்டோர் இடிமின்னல் விளைவாகக் கண்டேன்
அழகான இதழ் மலருமென்றேன் - சொற்கள்
அதனின்று எழும்போது அம்பாக நொந்தேன்

Thursday 20 October 2011

இனிய ஏமாற்றம்

ஏக்கம்
நான்பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு
வீட்டினிலே அன்புக் கூட்டினிலே
நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே

வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே நினைவானதிலே
கானத்திலே இழைராகமெனத் தினம்
காணும் இளையவள் போனதெங்கே?
மீனதிலே விழியானதென துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை

சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே ஒளியாகியதேன்
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?

காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனக் காதலைத் தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்

தேனெனவே ஒளிப் பாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.

இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?

எட்டாத கனியா இவள்?

ஆலை கொண்ட வேகும்சூழை
அதன்மே லிரும்பெனவே
வேலை விட்டுப் போகும் வெய்யோன்
வெந்தே சிவந்தபடி
தோலைஉரித்து தொங்கச்செய்த
மேகக் கூட்டமதுள்
காலைவிட்டுக் கடந்தேசென்று
கடலில் வீழ்ந்துருண்டான்

பாடும் பறவை ஒடும் நதியும்
படரும் இனிதென்றல்
கூடும் சுகமும் கொண்டேநின்றாள்
குமுதமென அவளும்
தேடும் சுகமும் திங்கள்வதனம்
தேவை என்றுரைக்க
ஆடும்விழியில் அஞ்சும்மொழிகள்
ஆயிரமா யிசைத்தாள்

சேரும்கண்கள் சொல்லும் உறவில்
செழுநீர்க் கமலமென
சோரும் வதனம் சிதையக்கூந்தல்
திங்கள் மறையுதென
வாரும்முடியை அந்தோ காற்று
வானக்கரு முகிலோ
நேரும்மதியின் மறைவை எண்ணி
நீவிச் சென்றதுவே

மாலைகாற்றில் மனதுக்கினிய
மரகத ரூபவண்ண
சேலைகொண்ட சுந்தரிகொட்டும்
சொல்லின் சுவைகண்டே
வேலையொத்த விழிகள் குத்தும்
வேதனை சுவைபடவே
மேலைத் திசையின் மேகச்செம்மை
மோக எழில் கண்டேன்

தேனை தவறி குங்குமச் சிமிழில்
தெரியா மற்போட்டார்
மீனைசெய்து மேகத் திங்கள்
மீது விழி வைத்தார்
யானைத் திமிரை மேனிக்களித்து
யாரோ தவறு செய்தார்
மானைக் கண்ணில் மருளச் செய்து
மற்றோர் தவறு செய்தார்

சேனைப் படைகள் செய்யும்போரைத்
தேகங் கொள்ள வைத்தார்
வீணை மீட்டவிரலைத் தந்து’
விதியைப் போட்டுவைத்தார்
பானைசெய்யும் பதமாய்மேனி
பார்த்துச் செய்தவனோ
ஏனோ நெஞ்சில் ஏக்கம் வைத்து
எட்டாக் கனிவைத்தான்

மேகப் பஞ்சைப் பிய்த்தேகொண்டு
மின்னல் தொட்டுமுகம்
ஆகச்செய்தார் அதனின்பின்னால்
அதிரும் மழைமுகிலாய்
தோகை கூந்தல்வைத்தே பெரிதாய்
தோன்றும் இடிமின்னல்
நோகத்தான் னென்நெஞ்சில்வைத்தான்
நீதிக் கழகாமோ?

கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்
எண்ணம் யாவும் நிற்பாள் இவளோ
என்னைப் பார்த்துவிடில்
மண்ணில் பிறவிப்பாவம் மறைந்தே
மாதவன(ள)டி சேர்வேன்

அணைக்காத காதல் நெருப்பு !

ஓடிவந் துள்ளமதை உத்தமரேஅணைத் தென்ன
உடல்சிலிர்க்க ஒருமுத்தம்ஊருறங்கத் தந்தென்ன
நாடிமலர்மேனியிடை நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென் நல்மனதைக்கெடுத்ததென்ன
ஆடிவரும் தேனே அழகுச்சிலை அமுதே
அன்பேயென் றாயிரமாய் அழைத்துமகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை குலவிகளித்தபின்னர்
கோதையிவள் குமுறியழக் குடிபோனதெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளு மணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாட்டமுறத் தவித்திடவே செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானும் விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேர்க்காதோ

வானவில்லி னேழுவகை வண்ணம் வெளுத்திருக்க
வட்டநிலா பொட்டல்வெளி வரண்டமண்ணாய் தெரிய
தேன்மலரில் வாசமிலை தென்றல் தொடக் கூதலிலை
தின்னவெனக் கனிபிழியத் திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று கொள்ளா நடைதளர
குழந்தையது மழலை சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து எரிமலையாய் சிதைவதுவோ

காதலெனும் நோயில்..!

மாலையிலே வண்டுறங்கும் மதுவழியும் பூவுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல் மணம் கண்டு றங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மயலெழுதி
நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில்வாராயோ
வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று
விரகமிடும் பனிவிலக வெம்மை தாராயோ
கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார்
கூடுமொரு வான்முகிலாய் குலவ வாராயோ
பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே
பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே

பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும்
போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே
ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே
ஆ உயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே
கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா
குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே
ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன
ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றது மின்றே!

நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன
நீயிருந்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே
கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன்
கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே
வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு
வேதனையில் கூவுகிறேன் விடிவு தாராயோ
வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன்
வாழ்வில் இவள் முடியமுன்னே வந்துவிடாயோ

இவர்கள் காதலராம் !

அவள் அழகு:

திரிந்த இடையும் தேனுறை இதழும்
சரிந்தகுழலும் சந்தன நுதலும்
விரிந்தமார்பும் வியனுறுமொழியும்
வரிந்தஇளமை வளமுடன் அவளாம்!

எரிந்த கதிரோன் எழுவான் வண்ண
தெரிந்த நீலத் திருவிழிப் பார்வை
புரிந்துஅவளோ புன்னகைகொள்ள
பரிந்துஇளகும் பார்ப்போர் உள்ளம்!

சிரித்தபோது செவ்வாய் மலர்கள்
விரித்த தோகை வெண்பனி பஞ்சை
உரித்த தேகம் உஞ்சலின் சுகமும்
எரித்த பொன்னாய் இளமையின் மின்னல்!

குனிந்த மாவின் கூர்கொள் கனியின்
கனிந்த மேன்மை கையணை கொண்டு
பனித்த மலரென் பட்டெனும் மிருதும்
இனித்த இளமை எடுத்தவள் பாவை!

அவன் வலிமை:

கடுத்த ஆண்மை கறுத்த உடலும்
எடுத்த மரமென் இயல்புறு கைகள்
மிடுக்கும் இளகா மென்மையின் எதிரி
விடுத்த வலிமை கொண்டவன் அவனே!

புடைத்த தோளும் புலிபோல் நடையும்
உடைத்த வன்மை ஓங்கிய ஆண்மை
அடைத்த குரலும் அழகில் கவியும்
படைத்த அவனோ பட்டறை இரும்பே!

அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

இவர்களே காதலராம்:

விருப்பமுற்று வியந்திடவருகே
பொருத்த மற்று பொன்னு டன்சேர
இரும்பை உருக்கி இழைவது போன்றும்
கரும்பை வேம்பில் கலப்பது போன்றும்

மதனும் ரதியும் மலர்களைத் தூவி
இதமும் மனமும் ஏற்புற வைத்து
எதை யும்பாரா இனிதே சேரும்
விதமாய் செய்யும் விந்தையாம் காதல்

காதலர் கனவு

தேனுலவும்  திங்கள்வரும் தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி  என்னருகே வந்தாள்
கானுலவும் மானெனவே களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள் குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியால் கொன்றாள்

வானிலவே உள்ளமது வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு
கானிலெழும் மின்மினிகள் கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின் தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு

தித்திப்பை நாவறியும் திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு
முத்துக்கள் கொட்டியதாய் முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு

வெற்றிலையை நீகுதப்ப விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க      
பற்றும் விரல் பத்தெனவே படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ
சுற்றிச் சிவந்தஇதழ் சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலர் நீர்பூக்குளத்தில் வீழ்வோம்

Monday 12 September 2011

ஏக்கம்!

வேலால் வேலால் எறிந்தாள் விழியாற் கொன்றாள்
வேகும் தீயைத் தேகம் கொள்ளச் செய்தாள்
பூவால் பூவால் கணைகள் கொண்டே எய்தாள்
பூவில் தீயை ஏற்றிப் போரைச் செய்தாள்

பாலாய் பாலாய் பழமாய் கனியாய் நின்றாள்
பாவை விழிகொண் டுண்ணத் தன்னைத் தந்தாள்
நாலை நாலாய் பெருகும் வயதைக் கொண்டாள்
நாவில் இனிதே தமிழைக் குயிலாய் சொன்னாள்

நூலாய் இடையும் நெளிந்தே குறுகிக் கொண்டால்
நோகும் உடலே என்றேன் என்னில் சாய்ந்தாள்:
பாவாய், பாகாய், பனியாய் உருகும் ஒன்றாய்
படரும் கொடியாய் நெளிந்தே குழைந்தே சோர்ந்தாள்

காயாய் பழமாய் காணும் உருவத் தெழிலாள்
கன்னிப்பருவம் கொண்டே மலராய், இதழாய்
தேயும் வளரும் நிலவாய்த் தென்றல் குளிராய்
தேகம் எங்கும் பொங்கும் உணர்வைத் தந்தாள்

வாராய் அருகில் வந்துவ சந்தம் வீசாய்
வானத் துளிகள் தூவும் நிலமென் றாவாய்
பாராய் கண்கள் மோதிக் கொள்ளும் போராய்
பாதிச்சமரில் தோற்றுத் தழுவும் பாங்காய்

நீயாய் நானும் நின்னை எனதாய்க் கண்டே
நிற்போம் வெயிலும் நிலவும் சேரும் ஒன்றே!
ஆகா ததுவே இருளும் தருமே என்றாள்
அணைத்தேன் நிழலை அவளோ விலகிக்கொண்டாள்

நோயாய் மனதில் வலியைத் தந்தே சென்றாள்
நொடியில் திரும்ப மருந்தாய் வந்தே நின்றாள்
தாயாய் அன்பும் தனிமைத் துணையும் தந்தாள்
தழலாய் எரியுபோழ்தே நீராய் வீழ்ந்தாள்

மேகம் எங்கும்தாவிகொள்ளும் மின்னல்
மேலே நீவித் தூண்டிச் செல்லும் தென்றல்
தாகம் என்றால் நாவில் தாவும் தண்ணீர்
தன்னில் யாவும் கொண்டாள் தன்னைத் தந்தாள்

ஓடும் உருளும் உலகில் எங்கும் துன்பம்
உரிமை யில்லா வாழ்வில் எதுவும் அச்சம்
வாடும் மனதுள் மக்கள் எண்ணித் துயரம்
வந்தா லிவளோ வாழ்வில் தோன்றும் ஒளியும்

நிலவா இவள்?

நீர்தேங்கு குளமும் நின்றாடு மலையும்
   நிலவேங்கி ஒளிவீசும் அழகும்
வீரெனும் வண்டும் விளையாடு மலரும்
  விரியநற் சுவைதரும் மதுவும்
காரிருள் மேகம் கவிந்திடத் தோன்றும்
  களிப்புமின் நடமிடும் மயிலும்
ஓரெனக் கொண்டு உவகையைத் தந்து
 உயிரென அணைந்தவள் நின்றாள்

பேரென்ன வென்றேன் பொன்நிலா வென்றாள்
  பொன்னிலா குறைகொண்ட தென்று
ஈர்வண்ணமதியோ  எழில்நிலாக்கோளம்
 இடைவலி கொண்டிடத்தாங்கும்
சீர்தனைச்சுட்டி சொல்லு உன்உண்மைப்
  பேரென்ன என்று நான் கேட்க
சேர்சுகம்தன்னை சிற்றிடைகொண்டாள்
 சிரித்தெனைச் சிறையினிற் போட்டாள்

வாயூறும் நீரும் வழிகின்ற இதழும்
  வானவர் தேனமு தென்றே
சேயாறும் உண்ணச் செயலன்ன தென்னைச்
 சிறுகையிற் குழந்தையென் றாக்கிப்
பூநாறும் என்னப் புத்துடல் நாறி
  போதைதான் கொண்டே மயங்கத்
தானாறும் வரையிற் தந்துமே கொண்டும்
   தானாறு கடலெனைச் சேர்ந்தாள்

நாவோரம் சுவையும் நடு ஈரமதுவும்
  நெளிந்தின்பக் கதை பேசும் உதடும்
தாவாரத் தூறல் தருகின்ற இன்பத்
   தவிப்போடு சிலிர்க்கின்ற சுகமும்
பூவாரம் போன்ற கைமலர்கொண்டே
 புரியாத பாடத்தைக் கேட்டு
யாவரும் கொள்ளா ஓராயிரங்கள்
  உண்டென இன்பங்கள் தந்தாள்

ஒரு பூவின் கதை (இது ஒரு காதல் கதை)

பூக்கள் மலர்ந்தன பொன்னொளி தோன்றிட
போனது காரிருளும்
தீக்குளித்து ஒருசெந்நிற மேனியன்
திக்கில் கிழக்கெழுந்தான்
நோக்கிஅவன் வரவெண்ணி மலரொன்று
நெய்யிதழ் தானவிழ்க்க
போக்கில் பறந்திட்ட போதைகொண்ட வண்டு
பூவைச் சுவைக்க வந்தான்

வேர்த்து இளைத்திட்ட பூவெனும் பொன்மகள்
விம்மியே நீர் சொரிய
காற்றெனும் காவலன் கண்டு சினம்கொண்டு
கற்பினைக் காக்கஎண்ணி
சீற்றமுடன் விசைகொண்டு குலுக்கிட
சென்றது வண்டெழுந்து
போற்றி மனம்நன்றி கூறிக் கொடிமலர்
பூரிப்பிலாடி நின்றாள்

வார்த்தை யொன்று அந்தபூமகள் கூறவே
வானத் தலையும்வளி
நீர்குளமாகிய விம்மும் மலர்கொண்ட
நேசமுரைப்பதற்கு
தேர்சில்லு இல்லா ரதமெடுத்துக் கீழைத்
திக்கி லுயர்ந்து வரும்
கூர்த்தஒளியுடை ஆதவனைக் காண
கூவியே விண்ணெழுந்தான்

பார்த்திருந்த பகை மேகமொன்று
பழியானது கொண்டயலில்
சேர்ந்தொளி வெய்யோன்வழி மறைத்தேயிடை
சென்றுமுன்னே தவழ
கார்த் திரள்மேகம் கறுத்தவனோ ஒருகாதல்
மலரில்கொண்டு
நீர்த்துளிகள் என்னும் நீள்கரம் நீட்டியே
நீவித்தழுவிகொண்டான்

போர்க்குணம் கொண்டவன்காற்றும் சினம்கொண்டு
பொல்லாச் சுழலெடுத்து
ஆர்த்தெழுந்தே அவன் ஆடியவேகத்தில்
அண்டம் கிடுகிடுத்தே
சேர்ந்தமுகில் விரைந்தொடியே போனது
தெற்குத்திசை வழியே
தேக்குமரங்களும் மூங்கில் அடர்ந்திடும்
திக்கினை நாடியதாம்

காலையில் பூவிடம் கண்ணியம் காத்திட்ட
காதலன் சூரியனோ
மேலை வானமெழ கொண்டபொறாமையில்
மேனி அனல் தெறிக்க
ஆலை உருக்கு மிரும்பெனச் சுட்டனன்
ஆதவன், காற்றிவனோ
சோலைமலருக்கு பொய்கை குளிர்கொண்டு
தேகம் துடைத்துவிட்டான்

பூவையின் காவலன் போதுமினிஅவள்
பட்ட துயரமெல்லாம்
பாவையின் உள்ளம் பரிதவிக்கு மவள்
பாசமிருந்த தென்றால்
தேவை நிரந்த காவலெனில் அவள்
தேடும் துணை கொடுப்பேன்
சேவைசெய்வேன் அவள் சித்தமென்றால் காதல்
செய்யும் மனமிருந்தால்

சின்னமலரதும் எண்ணியது தென்றல்
செய்திடும் வீரமெல்லாம்
என்ன சினம்கொண்டு ஓங்கிஅடித்திடும்
உள்ளம் வருடுவதும்
என்னை அவர்அன்பு கொண்டதனாலேயே
இத்தனை யாகிநின்றார்
நின்னை மணந்திடுவார் மலரேஉந்தன்
நெஞ்சம் மகிழ்ந்திடடி

காற்று விரைந்தது காத்துக் கிடந்த பூ
கண்டு மலர்ந்துகொண்டாள்
ஊற்று என இரு உள்ளத்தில் இன்பமும்
ஓடிப் பெருகி வர
வேற்றுமை காணா விருவரும் காதலில்
வீழ்ந்து கிடந்தனராம்
ஈற்றில் மலர்மணம் கொண்டனன் காற்றென
ஊரில் அறிந்து கொண்டார்

கட்டியணைத்தவன் காற்றென்பதால்
காலை கட்டமுடியவில்லை
சொட்டு நேரமதில் சுற்றிச் சுழன்றவன்
சேதிகள் காணச் சென்றான்
வட்டமிட்டு அவன் வந்தபொழுதினில்
வண்ண மலரதுவோ
நெட்டுஇருந்தது பூஇல்லை மானிடர்
வெட்டி எடுத்துவிட்டார்

கோபமெடுத்தது காற்று பெரும்புயல்
கூவிச்சுழன்றடித்து
கோபுரம் கூரைகள் கொட்டில் கதவெனக்
கொண்டவை பிய்த்தெடுத்து
சாபமிட்டே மரம்வீழ்த்தி அழுதது
யாரடா சொல்லு என்று
பாவமிழைத்த மனிதரோ சொல்லினர்
பேய்க்குணம் காற்றுக்கென்று

இது கவிகண்ட காதல்!

தென்றல் அலைந்திடத் திங்கள் எழுந்திடத்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்

கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்

அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படிக்க அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்

நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா

கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!

நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்

நீதி கேட்ட தேவதை!

1.  வினை வந்தது

கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட
  காண்பது யார்இவளோ?
பெண்ணின் குணமிழிந் தென்னைக் சினந்திடும்
   பேதையின் பேரெதுவோ ?
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட
   வந்தவள் யார்மகளோ?
எண்ண மெடுத்தவள் என்னநி னைத்தனள்
    எப்படிச் சொல்லுவளோ?

மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன்
   மென்முகம் வாடுவதேன்?
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன்
    நெஞ்சி லெழுந்ததுமேன்?
”பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்
      பகை வென்ற தால்மனதில்
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல்
       எண்ணுவ தாகிடுமோ?”

அன்னவள் பேச்சில றிந்திட ஆ இவள்
     அந்தியில் தாமரைகள்
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும்
      பொய்கையில் நீந்தியவள்
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில்
      மேற்கில் சினமெழுந்து
தன்னிலை கெட்டு தணல்கொதி கொண்டு கடல்
        கண்டு வீழுகையில்

மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில்
     துள்ளிடும் நீரலைகள்
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு விரைந்து
       புரண்டுசெல்ல
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர்
        வெண்மதி நீந்துவதாய்
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில்
           இன்பநீராடக் கண்டேன்

கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள்
      காரிகை யின்எழிலில்
அண்ணள வாயொரு கண்ணிமை நேர
       மயர்ந்தது நிச்சயமே
எண்ணியொருந் தவறேது மிழைத்திலேன்
      என்னவென்றே பகர்வாய்
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய
         காட்சி தெரிந்திலையோ

”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப்
       பேதை யல்லயிவளோ
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்னிதழ்
        கைவிரல் தொட்டதுவும்
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள்
         ஆசையில் கொஞ்சியதும்
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய 
          பொய்யும் மறந்ததென்ன?

கன்னியிவள் உடல் கற்பில் மாசுஎழக்
        காரிய மானவரே
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை
         முன்னேயெ ழுந்தருளும்
பின்னையி ராப்பக லோடு கலந்திடும்
         போதில் அரசமர
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித்
          தென்றலென நடந்தாள்



2. நீதியைத் தேடி

அன்னம் நடைஅசைந்தாடுமிடை எழில்
    வண்ண மயிலெனவே
எண்ணமது சிதைந்தோட அவள்நடை
    கண்டுமன மிழந்தேன்
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள்
     வஞ்சியின் சொல்லினுக்கே
திண்ண மெடுத்திவள் செய்வதுமோச மென்
      றுண்மை பகரச்சென்றேன்

மஞ்சள் நிறவெயில் மாலைக் காற்றின்கீதம்
    மாந்தரின் பேச்சினொலி
பஞ்சென வேதுள்ளி வஞ்சமில்லா தோடும்
     பாலகர் கொஞ்சுமொலி
நெஞ்சைக்கவர்ந்திட சங்கீததாளமும்
   நேரெதிர்காதிற் கொண்டேன்
சஞ்சலங் கொள்மனம் பஞ்செனஒத்தடம்
    செய்தது மாலையெழில்

சின்னஇதழ் விரித்தின்ப மணமெடுத்
    தேங்கின பன்மலர்கள்
தின்னவருங் கருவண்டை அசைந்தாடித்
   தேடின பூங்கொடிகள்
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல
   நங்கையர் பூமுடித்து
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு
    சித்திர மாகிநின்றார்

நெல்மணி தேடிய புள்ளினங்கள்
    வானில்நீளப் பறந்துவர
புல்லைக் கடித்தது போதுமென்று பசு
    போகும் வழி திரும்ப
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு 
    கன்னியர் கூடியதும்
சல்சல் சலவென்று சலங்கை குலுங்கிட
     சின்னவர் ஆடியதும்

கண்டுமனதினில் கொண்ட உவகைகள்
     கொஞ்சமல்ல நடந்தேன்
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்
     கண்டு அருகணைந்தேன்
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னை
      கண்டு மருண்டிருக்க
செண்டைமலரொத்தசின்ன இதழென்னும்
       பூவை மலரவைத்தாள்

வந்திடவே செய்யீ ரென்றெண்ணவே
      ஆகா..வந்தீர் அதிசயமே
சிந்தையி லென்னையும் கொண்டதனாலேயே
         வந்ததுநிச்சயமே
இந்தளவே போதும் உங்கள் நினைவுடன்
      என்றுமே வாழுவேனே
எந்தநினைவுடன் சொன்னவளோ அவள்
       நெய்விழி பூத்ததுநீர்

பித்துப்பிடித்தவள் போலப்பிதற்றிடும்
     பெண்ணே பெரியோர் எங்கே
சித்தம்பிழைத்தவள் உன்னை நம்பியிங்கே
     சேர்ந்தேன் மடமையிலே
எத்தன் செய்யும்வேலை இட்டவளே இனி
       என்னைமறந்துவிடு
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டாலே
    பிழைத்தனைஓடிவிடு

கட்டியணைத்துமே கன்னியென்னை உங்கள்
     கைகளில் இட்டவரே
விட்டு விலகிட எண்ணியிருப்பது
     விந்தையில் விந்தையன்றோ
தொட்டதனாலேஎன் தூயமனதினில்
      தோன்றிய வேதனையை
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு
      வேடிக்கை வேண்டியதோ

அந்தர வானிலேகூடுகட்டி அதில்
      ஆனையின்முட்டைவைத்தேன்
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று
       வீணில் பசப்பும்பெண்ணே
உந்தன்மொழி பொய்என்னிடம் செல்லாது
        போதும் நிறுத்திவிடு
சுந்தரியே சொல்லு சேதிகேட்கும் சபை
       சென்றது எங்கேயிங்கு

சொல்லி முடிக்க முன்வந்தவரோ ஒரு
      சித்திரக்கேலி யென்னும்
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும்
      ஊடேசிலமுடிகள்
நல்லது உங்கள் வழக்கென்ன கூறுவீர்!
     நங்கையே சொல்லிடுவாய்
வல்லவர் சொல்லியபோது புரிந்தது
     வந்தவர் ஊர்தலைவர்


3. பொய்யுரைத்த பேதை

சின்னவள்தான் இவள் சொல்லும் உண்மையிது
     சிந்தை மயக்கியவர்
எந்தன் கனவினில் வந்து நின்றார் இரு
      கன்னம்தழுவிநின்றார்
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன்
       பின்னலைநீவுகிறார்
முன்னமிருந்து முகம்பிடித்தேமுழு
      வெண்மதிஎன்குகிறார்

ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல
      உத்தமமானவரே
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே வந்து
        நெஞ்சில்புகுந்துவிட்டார்
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை
      ஆரத்தழுவி விட்டார்
போருக்குவீரனாம் பெண்மனதுள் வந்து
      பித்தனாய் ஆடுகிறார்

பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம்
     பாம்பின் விஷம்என்குது
காலைவரை கண்ணை மூடினும் பக்கமாய்
     சேரத் துயில்நாணுது
வாலை பருவமும் நோயானது என்
      வண்ணம் குலைந்திடுதே
சேலை யிருப்பதே பாரமென்று பெருந்
       தீயில் உடல் வாடுதே

கண்கள் பனித்தன தொங்கி இமைதனில்
      கண்ணீர்த்துளி திரண்டு
பொன்னெனும் கன்னம்கடந்து இதழ்ழெனும்
       பூவில்கலக்கக்கண்டேன்
சின்னை இதழ் கசந்ததுவோ, அவள்
      செவ்விதழ் கோணலிட்டாள்
என்னைகடைவிழிகொண்டு கண்டுஇதழ்
      மீண்டும் விரித்துரைத்தாள்

பூவிழிமூட முடியவில்லைஒரு
      பொழுதும் தூக்கமில்லை
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒரு
      நல்ல உணர்வுஇல்லை
ஆவிதுடிக்குது எண்ணியொரு ஆனந்த
       கீதம் இசைத்தபடி
கூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த
       கோலமென்றாகிவிட்டேன்

காற்றாகி வந்து கலகலத்தே என்னைக்
          கைகளால் நீவுகிறார்
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய்
       ஆடையைதள்ளுகிறார்
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியி
      லோடி பெருகுகிறார்
வேற்றுமையின்றியே வேண்டுமொருநீதி
      வேதனைபோயிடவே

கொட்டியதுபல பொன்விளை காசென
        கொல்லெனவே நகைத்து
பட்டெனக் கைதட்டிப் புன்னகைத்து சபாஷ்
        பார்த்தகனவா என்றார்
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஏய்
          நிற்கும் இளையபெண்ணே
குட்டிகதை கேட்கக் கூட்டிவந்தாய் இது
        குற்றம் எனச்சினந்தான்

செம்புயலாகவேசீறிப் பகைவெல்லும்
     சீராளன் வீரனே பார்
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே
     வேடிக்கையானதுகாண்
அம்புவிழிகொண்ட ஆரணங்கின் பக்கம்
       அர்த்தமுளதோ நீசொல்
நம்புவதா இதில்நானெது கூற நீ
       நல்லொரு தீர்ப்பளிப்பாய்

செந்தழல்வீசிய சின்னவளின் முகம்
       சோர்ந்து துவளக் கண்டேன்
எந்தளவோ ஓர் எல்லையற்ற சோகம்
       அங்கவள் மூச்சில்கண்டேன்
மந்தமெனும் இளம்புன்னகையிலொரு
       மாசறு காதல் கண்டேன்
செந்தமிழ் செல்வியின் பின்னும் கதையிலே
        நேசமிழைதல்கண்டேன்

பொல்லா மனம் கொண்ட பொய்மகளே ஒரு
       போதும் மன்னிப்பேயில்லை
வல்லவன் என்னிடம் சொல்லியவை தந்த
        வெஞ்சினம் போகவில்லை
நல்லதொரு நீதிநான் சொல்லுவேனென நங்கையை
         நோக்கி நின்றேன்
கல்லில் சிலையென கண்கள் பனித்திட
        கன்னம் சிவக்க நின்றாள்

4.தீர்ப்பு

புன்னகைத் தாள்அவள் பூமலரும் அந்தப்
       போதை விழிமயக்க
முன்னமிருப்பது பெண்ணாவளோ ஒரு
       மேகத்தின் தேவதையா
என்ன விழைந்தது என்மனதில் அவள்
     ஏற்றிய தீ எரிந்தே
சின்னதென எழும்வேகம் பரந்திட
       செய்வதுஎன் திகைத்தேன்

உந்தன் கனவதில் வந்தவன் நானென
      கூறிய பொன்மகளே
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்
      கின்னல் விளைத்துவிடு
சிந்தும் உன்புன்னகை பங்கம் இழைத்தவன்
        கண்களில்நீ புகுநது
தந்துவிடு இவன் தந்தபொருளவை
      ஒன்றும் குறைவிலதாய்

தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும் ’
          தொட்டு அளித்துவிடு
பட்டு இதழ்களில் முத்தமிட்டால் நீயும்
         முத்தம் கொடுத்துவிடு
கட்டியணைத்தை கட்டியணை நீயும்
         கட்டளையிட்டுவிடு
கொட்டிகுவித்த குற்றமெல்லாம்பதில்
        கூட்டிக் கொடுத்துவிடு

உந்தன் மனதினில் காதல்நெருப்பிட்ட
       காளையிவன்தனுக்கு
சிந்தனையெங்குமே தீயிட்டு காதலின்
        தீமை உணர்த்திவிடு
சந்தணமேனியில் செய்தகுறும்புகள்
        அத்தனையு மெழுதி
தந்ததைப்போல தழுவிக்கொடுத்திடு
        தீரும்கணக்குஅதற்கு

செந்தணல்வீசும் சிலையெனக் கண்டவள்
         இந்தக்குளிர்நிலவா
சுந்தரம் வீசிடும்பூந்தென்றலா இல்லைச்
          சுழலும்வன்புயலா
சிந்தும் சினமின்றி சேயிழை கண்களில்
            சேர்ந்ததுமுத்துக்களா
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பது
             இன்பக் கலக்கத்திலா

செவ்வரியோடிய கண்கள்மயங்கிடச்
         சற்றுநிமிர்ந்துநின்றாள்
திவ்வியரூபமாய் சுந்தரிபொன்னெழில்
        தேகமெடுக்க கண்டேன்
கொவ்வைஇதழ்களில் புன்னகை பூத்துக்
         கொஞ்சமருகில் வந்தாள்
எவ்விதம் உங்கள் கனவில்வருவது
         ஏழைஅறியே னென்றாள்

சொன்னவை அத்தனை நான்புரிவேன் ஆனால்
        சொப்பனமல்ல வென்றாள்
முன்னே இருந்து அளித்திடுவேன் ஆனால்
        மொத்தமாயில்லை யென்றாள்
சின்னச் சின்னதெனத் தந்திடுவாய் நானோ
         சேர்த்துக் கணக்கிடுவேன்
என்ன கொடுப்பதில் வஞ்சனைசெய்திடில்
        வட்டிஎடுப்பே னென்றேன்

மன்றநடுவரைக் காணவில்லை அவர்
         மாயமாய் ஏகிவிட்டார்
தென்றலே போதுமா தீர்ப்பு பிழைத்ததா
           தேவையைக்கூறு என்றேன்
கன்றிளம் மானுடை துள்ளலுடன் அவள்
        கண்களில் மின்னொளியாய்
நின்று இதுகன வில்லை என்றுஎந்தன்
          நெஞ்சில்முகம் புதைத்தாள்

(முடிந்தது.)

நீரள்ள வந்ததோ தாமரை !

செந்தூர மென்வண்ண செங்கனி முகங்கண்டு
      சேர்முகிலில்மூடும்கதிரும்
மன்னன் ரதிமலரில் தன்வேல் மறைத்தெறிமா
     மலைமனமும் கவிழும்விழியாள்
சின்னோர்வளை புருவஞ் சேர்மதியம் நீராடச்
      சிதையு நீரோடி மின்னும்
மென்னீர்மின் பவள மிளிர்சங்கை நேர்கண்டம்
      மேன்மைசொல நாளேகுமே

தந்தஇடை கொள்குடமோ தளிர்மேனி கொஞ்சத்
      தாங்காது கொல்கொல் என்று
சந்தன மென்பாதச் சதங்கைகாள் வெகுண்டுகல
     சத்தமிடுஞ் சேதி சொல்லும்
முந்தோடிச் செல்காற்றும் மோந்துநீர் கொள்வோள்
     முன்கால் நீருள்புதை யயலில்
செந்தாமரைக் கீழ் சிறுஇலையின் மறைகயலின்
     செவிகூற விழியும் கண்டே

அந்தோசொல் கேளீரவ ரெங்கள்குலத் திருவரென
    ஆ வென் றலறியோடி
செந்தாமரை யெம்மைச் சிறையெடுப்ப தென்னவோ
    சேரீர் என்றூர் சலசலக்க
வந்ததோர் சொல்கேள் வளைஅலைநீ ருறங்குகுலம்
    வாழ்வெண்ணித் துடிதுடித்து
எந்தோ பங்கயமென் றெழுந்துபடை கயல்திரளும்
   இனிதாமெம் ஈழநாடே!

காதலை ஏன் படைத்தான்?

மெல்லிய பஞ்செனும் மேகம் படைத்ததில்
மின்னலை ஏன்கொடுத்தான்
முல்லைசெறி மலர்ப் பந்தலின் மீதிலே
மூடியோர் பாம்பை வைத்தான்
கல்லும் உருகிடும் சேதி கொள்ள எங்கள்
கண்களில் நீர் படைத்தான்
வல்லமை கொண்ட மனங்களிலே கொடும்
வஞ்சனை கோலமிட்டான்

பென்னம் பெரிதென பூமி செய்து அதை
பின்னிச் சுழல வைத்தான்
இன்னுமதில் நடமாடவென மக்கள்
எத்தனையோ படைத்தான்
பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்
மின்னலென மனம் கொன்றிடக் காதலை
மெல்ல இழையவிட்டான்

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

தண்ணீரில் தாமரை தான்படைத்து மனம்
தாகமெடுக்க வைத்தான்
விண்ணின் கதிருக்கும் வீதி மலருக்கும்
வேடிக்கை காதல் வைத்தான்
மண்ணில் இருப்பது மாயமென்ன? மனம்
மாறும் உணர்வு வைத்தான்
எண்ணி மனங்காவல் கொள்ளவில்லை யெனில்
என்றுமே துன்பம் வைத்தான்

கொள்ளை கொண்ட பைங்கிளி

நீள்விழியாள் என்நெஞ்சத் திருந்தவள்
நித்தம் உலாவருவாள்
ஆழ்மனதுள் வந்தே ஆசைக்கடை விரித்
தன்பை விலைக்கெடுத்தாள்
வேள்வியில் தீயிட்டு வைத்த மனத்தினை
வெண்பனிநீர் தெளித்தே
ஆழி அலைமேவும் ஆவேசத்தில் என்னை
அன்பினுள் மூழ்கடித்தாள்

தேவிஎன் எண்ணத்தில் சேர்ந்தே இருந்தொரு
தீபம் எடுத்து வைத்தாள்
ஆவி சிலிர்த்திட ஆக்கினை செய்தொரு
அன்பிற் கடிமை கொண்டாள்
கூவி ஒலித்திடும்வானக் குருவிபோல்
கொண்ட சுதந்திரத்தை
பாவிபறித்துமே பாதிநாள் தன்னுடை
பக்கமிருத்திவிட்டாள்

மேவி எழுந்திடும் மென்னிளம் பூக்களாய்
மெல்லியவாசமிட்டாள்
காவியமாய் கலைஓவியன் தூரிகை
காணா உருவெடுத்தாள்
வாவிமலர் தூங்கும் வண்டினையொத்த
விழிகளை மின்னலிட்டு
தாவிமலர் செல்லும்தன்மை கெடுத்தென்னை
தன்னில் நிறுத்தி வைத்தாள்

கார்முகில் போலெழும் கன்னங்கரி யதோர்
கூந்தலை தோள் விரித்து
வேரெழு மூங்கில் வியன் தரு மென்மைகொள்
வெண்மலர்க் கையசைத்து
தேரெனவே அசைந்தாடும் நளினத்தில
சித்திரமாய் நடந்து
பேரெனை பித்தனென்றாக்கிய வித்தகி
பெண்மைக்குக் காவலிட்டாள்

தேடி மலர் கொய்ய பூந்தளிர் தூங்கிடும்
சோலை அலைந்திருந்தேன்
வாடிக் கருகிடும் வண்ணமலர்பல
வீணில் பறித்துவந்தேன்
கூடிவிழிமலர் கொஞ்சிடும்தாமரை
கூந்தலில் பூஇருத்தி
கோடிமலர் கொண்ட மேனி மலர்களைக்
கொள்ளென கேலிசெய்தாள்

செவ்விளவானச் சிவப்பினிலே பல
சித்திர மேகங்களில்
எவ்வித மிங்கவள் எட்டிநிறமெடுத்
தீர்கன்னம் பூசிவைத்தாள்
கொவ்வை இதழ்கள் குலுங்க சிரித்தவள்
கொட்டிய புன்னகையில்
பவ்வியமோஇந்த காளைதனை ஓர்
பைங்கிளி வென்றுவிட்டாள்
********

வேள்வியில் தீசுட்டு வெந்தமனம்.-
பிரமச்சரியம்காத்த வெம்மையில் வாடிய மனம்

காதலைப் பகிர்ந்த காதலி !

வண்ண நிலவைப்பிழிந்தெடுத்து அதை
வார்த்தவள் மேனிசெய்தான்
வெண்ணெழில் மேகப் பஞ்செடுத்தேயவள்
மேனி திரள வைத்தான்
கண்ணில் கவரும் காந்தமதைக் கொண்டு
காதல்செய்ய அழைத்து
பெண்ணில் அழகில் பித்தனென்றாகிட
என்னை மயக்கிவிட்டாள்

கூந்தல் முகர்ந்து கொள்நறு வாசத்தில்
உள்ளதெல்லா மிழந்தேன்
ஏந்திழை காணிடை ஏங்கியெழுவரி
தூங்கிமனம் இளைத்தேன்
காந்தள் மலர் எனும்கைவிரல் பட்டிட
காணும் உலகிழந்தேன்
பூந்தளிர் மேனியில் பொய்கை குளிர்தரும்
ஆனந்தபோதை கண்டேன்

ஆயினும் இன்றவள் என்னை மறந்தவன்
அன்பினுக்காகிவிட்டாள்
போயவன் பக்கம் இருந்து எனதன்பை
தூசென விட்டுவிட்டாள்
சேலை இழுத்தவன் செய்யும் குறும்புக்குச்
சிந்தை பறி கொடுத்தாள்
பாயில் படுத்தவன் பக்கம் அணைத்துநீ
தேனென கொஞ்சுகிறாள்

மாயம் புரிந்தவன் மேனிஅழைந்தவள்
மார்பினில் தூங்குகையில்
நீயில்லையேல் இனிநானில்லை என்று
நீலி பசப்புகிறாள்
ஆவிதுடித்தவள் ஆற்றும் செயல்கண்டு
மேனி துடித்து நின்றேன்
பாவி என்னை மறந்தாயடி நீதியோ
பண்ணுவதேது என்றேன்

பூவிதழ் தன்னிலும் மெல்லியளால் ”அவன்
ஆழ்ந்து உறங்குகையில்
பாதி இரவினில் நான் வருவேன் இன்பம்
பார்த்திடுவோம்” என்கிறாள்
நானென்ன செய்வது நானிலத்தில் இந்த
கோதையரை நம்பியே
ஆண்படும்பாடு அறிந்து சரியென
ஓர் பதில் சொல்லிவிட்டேன்

போனது நேரம் பூமகள் இன்னமும்
காணவில்லை அவனோ
ஏனோ விழி மூடிதூங்கவில்லை என
எண்ணி பொறாமை கொண்டேன்!
நேரம் கடந்தவள் ஓடிவந்தாள் எந்தன்
நெஞ்சில் தலை புதைத்தாள்
ஆரத்தழுவி அவள்முகம்தாங்கி
ஆனது என்ன என்றேன்

தேனிதழால் ஒருமுத்தம்தந்து உங்கள்
செல்லமகன் குறும்போ
தாவியணைத்தென்னை ஓர்கணமும்
பிரியாத அன்பு கொண்டான்
ஆக அவன்இந்த அப்பாவுக்கு மகன்
தப்பாமல்தான் பிறந்தான்
தூங்க வைத்தே அவன்தொட்டிலில் இட்டிட
போதும் என்றாகிவிட்டேன்

நான் சிரித்தே அவள் நல்முகம் நோக்கி
எம் வாழ்வில் இனிமை தந்த
ஆனதொரு வயதான மழலை உன்
தேனிதழ் முத்தங்களை
பாதிதிருடி தன்பால் நறுவாசம்கொள்
ஈர்கன்னம் கொண்டான் என்றேன்
மீதி இன்னும்நூறு உள்ளதென்று விழி
மூடி இதழ் இணைத்தாள்:

மான் என்பதா? தேன் என்பதா?


நீல விழிகொண்டு கண்டாள் - என்
  நெஞ்சில் நெருப்பினைத் தந்தாள்
பாலமு தாய்இதழ் கொண்டாள் - ஒரு
 பார்வை யிலே எனை வென்றாள்
 
ஏனிவள் பூமியில் வந்தாள் - என்
    ஏழைமனம் கொய்து கொண்டாள்
தானினிப் பாளெந்தன் உள்ளம் - தனை
   தத்தளிக்க மெல்லக் கொன்றாள்
 
தேனிவள் என்றிடில் வண்டால்- ஒரு
 துன்பம் இழைந்திடு மன்றோ
மீனிவள் கண்களோ என்றால் - அது
   மண்ணில் துடிப்பது நன்றோ
 
மானிவள் துள்ளலே என்றால்- அந்த
   மாஅரி பாய்ந்திடு மன்றோ
வானில்நி லவுபோல் என்றால்- அவள்
  வாழ்வுதொ லைவாகு மன்றோ
 
பூவெழில் கொண்டவள் என்றால் - பூ
   மாலையில் வாடிடு மன்றோ
மாவின்சு வைகனி என்றால் - கிளி
   மங்கையைத் தீண்டிடு மன்றோ
 
பஞ்சுடல் மென்னிளம் மேனி - எனில்
   பஞ்சுப றந்திடு மன்றோ
நெஞ்சு தவிப்பதைக் கண்டால் - என்
     நிம்மதி போயிடு மன்றோ
 
தெங்கென ஓடிவ ளர்ந்தாள் - பல
  தீஞ்சுவை இன்பம் பகிர்வாள்
எங்கிருந்தோ இவள் வந்தாள் - எனை
   எத்துணை பித்தனாய் செய்தாள்

மங்கி மறையும் பகலாய் - என்
   மாபெரும் வன்மை கரைத்தாள்
செங்கனி தேடிடும் வண்டாய் - தனைச்
    சுற்றிடச் செய்தாள் தகுமோ?

இயற்கையும் இவள் கண்டு...

குழல்நாதம் மணியோசை குரலீது அன்றோ
குறுமணியில் அசையுவிழி குறுகுறுத்த வண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளு துளமோ
 
அலைநடுவில் தலைகுனியுமல்லி இவள்கண்டோ
அதுநடன மாடியது இவள்நடைப யின்றோ
தொலைநின்று விரியும்அலை தொடும்விரல்கள் பட்டோ
துள்ளுமிளமான் இவளின் துள்ளல்தனைக் கற்றோ
 
படர்வானில் முகில்வந்துபாவையிவள் மென்மை
பார்த்தேங்கி அடிவானில் போய்கிடந்த தன்றோ
சுடரோனும் விழிகண்டு ஒளிதானி தென்று
சுடுவானி லிருந்தோடி சோர்ந்துகடல் விழுமோ
 
மழைபொழிய நதிபொங்கும் மனதிலுணர் வதுவோ
மதுமலரும் மணமிவளின் உடல்கண்டு விழுமோ
வளையலிசை கவிபாட வந்த இளங்குயிலோ
வலை தன்னில் மீனுமிவள் விழிகண்டு புகுமோ
 
வெளிவானில் தனியாக விளையாடும் நிலவும்
வீசுமிளங் காற்றெழுந்து விரையவரும் சுகமும்
தளிர்மேனி இழைந்தஎழிற் தாமரையின் கன்னி
தவளுமிளம் புன்னகையில் தாகமெழச் செய்தாள்

கருந்தேளில் கொடியதெனும்காதல் நோய் என்னை
கடுகேனும் அணுகாது காத்துவிடு பெண்ணே
வருந்தாகம் அருந்தாமல் வாழுமுயிர் இல்லை
மருந்தாக இல்லாமல் மதுவாகி நீவா !

மந்திரமோ? தந்திரமோ?

காதலன்:
போரில் பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்து விட்டேன்
நேரில் இவள்விழிப் பார்வை உடல்படக் காயமடைவதென்ன?
தோளில்  தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங் குவதேன்

சூழும் வினைசெய்யும் சுந்தரியோ  இவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ

காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்

அன்னைதனும் எண்ணங்கொள்ளா விதமிவன் எங்கும்கண்ணைவிடுத்து
என்னஇருந்துமொன் றில்லாதாய் மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே

(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்

(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில் வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம் எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை

காதலன் (மனதுள்)
கண்ணில்மலர்களும் காணும்  இதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கையும் செய்ததென்ன இவள்தேன்சுவைப் பொற்குடமே
எண்ணத் துடித்துடல் ஏனோ மயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்

(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்

(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ

(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்

(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்

வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ

கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்

பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்

பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்

கிராமத்துக் காதல்

செந்தாளம் பூவெடுத்து சிங்காரகொண்டையிட்டு
என் வாழ்வைபங்குபோட்ட பாவையே
பன்னாடை கள்வடித்து பருகிதோ அலுத்ததடி
உன்னாசைஅன்பில் கள்ளை ஊற்றடி

பொன்மாலை தூங்கும் ஒரு சிங்கார வெண்கழுத்தின்
முன்னாலே மூடிவைத்த தாமரை
தென்னோலை காற்றிலாட திங்கள் மேனி தெரிவதுபோல்
உன்னாடைக் குள் மறைத்த தேனடி?

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து சிங்காரக் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி

பந்தாடும் பைங்கிளியே பாவக்காய் பந்தலுக்கு
முன்னாலே நின்று முத்தம் தந்ததும்
இந்தாடி என்னவென்று என் மாமி கேக்கையிலே
முள்ளாலே சேலை போச்சு என்றதும்

தேங்காய் உரித்துமட்டை  தென்னையோடு கொட்டிவைக்க
பாம்பொன்று ஆடுதையோ என்றதும்
ஏங்கிநானும் ஓடி உன்னை என்னவென்று கேட்டுவர
வாங்க மச்சான் காதலிப்போம் என்றதும்

காவோலை துக்கியொரு கால் மிதிக்கும்போதினிலே
வாயோரம் வெத்திலையை போட்டதும்
ஆவென்று கூறி உந்தன் அமுதமதை ஊட்டிவிட்டு
காதோரம் இரகசியங்கள் சொன்னதும்

பச்சைவயல் குளத்தினிலே உச்சிவேளை குளிக்கையிலே
இச்சையோடு வேட்டிசட்டை கொண்டதும்
பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
நிற்கவிட்டு கேலி செய்தும் கொண்டதும்

அடைத்தவேலி  கிடுகிருக்கும் மறைப்பினிலே நீகுளிக்க
படபடக்கும் மனது கொண்டு நின்றதும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறும்பினிலேபொய்யுரைத்து  கொன்றதும்

அத்தனையும்செய்து என்னை ஆசை கொள்ள வைத்தவளே
எத்தனைநாள் காக்கத் தாலி கட்டியே
பக்கத்திலே வைத்திருந்து பத்துவிரல் கொண்டணைத்து
மொத்தம்கொள்ள போவதென்று சொல்லடி!

செல்லம்மா நீ சொல்லம்மா


தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா

வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?

செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா

பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா

பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா

பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?

நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா

பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.

அவள் காதலை இவளிடம் சொல்லி..!

வண்ணமயில் ஆடுமதை வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம் கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன் கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும் திசைநடந்து சென்றேன்

பெண்ணவளோ என்மனதைப் கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம் பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள் துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற் திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல் மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து துரிதுநடை கொண்டேன்

மெல்ல விழும் அங்குமிங்கு மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ் முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே விண்ணிறங்கும் செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல் வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது? எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும் எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்\
மோதிஎன்னை காதலிட்டாள் மோகம்கொண்டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உதடுகளைநீவி

நல்லவர்கள் நாலுபேரின் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்று சொல்லி நின்றேன்

பெண்ணவளோ வெஞ்சினத்தை மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே என்று காதல்சொல்லிக்
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும் என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும் தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதை சிந்தைகொள்வதறிவேன்
சென்றுவிடும் என்னைத்தொடில் மெய்யிலுயிர் கொள்ளேன்

கண்ணிரண்டும் நீர்துளிக்க கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக் காலெடுத்துவைத்தாள்
விண்ணதிர இடியிடித்து வெளியிலோடிச்செல்ல
விழிமலரைமூட அவள் வேதனையைக்கண்டேன்
இன்னும் இனிவிட்டு வைத்தால் இந்தமாலைநேரம்
இன்பமன்றித் துன்பமென ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுக்கேதுமேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக் கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள் சக்களத்தி என்றாள்

நெஞ்சங்கனிந்தவளாம்

நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி

கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட

மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ

அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்

(இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?)

ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும். அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியதுஅப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத் தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக் கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின் கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது



இது இரண்டாவது பொருள்