Pages

Wednesday 10 October 2012

காத்திரு பெண்ணே!


வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

Monday 1 October 2012

என்ன மாயமோ

கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
  காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
  வண்ணம் மறைந்து கொண்டாள் 
திண்ணமிதே அந்த தென்றலென விழி
  தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
   பாதியென் றாகிவிட்டாள் 
    
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
  காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
  பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
  எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
  கண்டு திகைத்துநின்றேன்

பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
  போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
  தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
  அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
  சுட்டும் வழிநடந்தேன்
 
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
  தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
  கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
  தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
  காண்சுகம் அல்லவென்றாள்

சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
  செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
  நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
  தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
   சித்தம் பிழற வைத்தாள்