Pages

Tuesday 10 September 2013

தீயாகி நின்றாள்

தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே

மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட  பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே

செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்

துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்

பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட  விழிக்கும்நான் மயங்குவனோ

தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ


Saturday 9 March 2013

காதல்பரிசு

முன்நே ரிருவிழிகள் மொழிசொல் குறுநகையும்
தன்நேர் திருநடையும் தாளமிடும் கால்மணியும்
மின்னற் கொடிவிளையும் மோகனமும் முழுநிலவென்
பொன்வார் எழில்வதனப் பூங்கொடியாள் முன்னேஎன்

கண்ணிற் படவந்தாள்,கனிந்துமனத் தழல்சொரிய
வெண்ணை வழிதேக விளங்குமல ருறைவாசத்
தண்ணெழி லாள்தன்னைத் தாகமுற நான்நோக்க
எண்ணத் திருந்தஅவள் ஏக்கமது கண்டினித்தேன்

மண்ணிற் சிறுயிடையாள் மதுவழியு மிருஇதழைக்
கிண்ணத் திருவமுதம் தேவர்மறந் திருத்திவைத்த
வண்ண குவளையெனும் வாய்மலரின் தாகத்தை
உண்ணக் கருதிஅவ ளுள்ளதிசை மருகிநின்றேன்

செந்தாழம் பூந்தேகம் திரிந்துவ ளைந்தயிடைச்
சந்தும் சரிந்தெழுந்து சரசமிடும் பூம்பொதியும்
முந்தும் குணமும் முல்லையெனும் பல்லொளிரச்
சிந்தும் நகைமன்னர் திறைமணிக ளெனப்படர்ந்தே

இமைகள் துடித்திளமை இறுகமூச்செழ முடியா
தமைவன் தருதென்னத் திளங்கனியென் னிருசார்கொள்
குமைந்த வளைந்திழைந்து கொண்டுபரந் தினவெடுத்தே
சமைந்தழல் வெஞ்சரமெடுத் தழைந்திடவென் மனமிழையத்

தண்ணொளி யேதேனே தருமமென ஏதுமிலாக்
கிண்ணமெடுத் திரந்திருக்கும் கீழ்மகனைப் போலிரந்து
வண்ணக் குறுங்கனவே வாழ்வில்லை நீயென்னிற்
திண்மை குலைத்தசிறு தேரேநீ சேரென்னை

என்னத் திருமகளாள் இனிதுஉணர்ந் தனதிருகால்
பின்னப் பிழன்றுகுறை பிறைநிலவென் னுதல்பிறந்த
சின்னத் துளிவியர்வை சிந்துமள வச்சமெடுத்
தன்னநடை பயின்றணுகி அலைகுழலாள் எனதுவல

கன்னத் தொருகடிதினையே கனியவொரு மின்னலென
சொன்ன தொருஒளியும் கொள்ளத்தெம துதிரம்
தின்னவருங் கொசுவினறம் கொள்ளா வாழ்வணைத்த
தன்னவொரு விதமெடுத்தே தளிரென்மலர்க் கரமீந்தாள்