Pages

Tuesday, 3 January 2012

காதலெனும் போர்க்களத்தில்

காதலன்:
போரில்பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்துவிட்டேன்
நேரில்இவள்விழிப் பார்வைஉடல்படக் காயமடைந்துவிட்டேன்
தோளில்தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங்குகிறேன்

சூழும்வினைசெய் சுந்தரியோஇவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ

காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்

அன்னைதனும் எண்ணங்கொள்ளாவிடமது எங்கும்கண்ணைவிடுத்து
என்னஅணிந்தும் ஒன்றில்லாதாய்மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே

(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்

(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில்வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம்எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை

காதலன் (மனதுள்)
கண்ணில்மலரும் கனியிதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கை படைத்ததென்ன இவள்பேசரும்பொற்குடமே
எண்ணஉடல்துடித் தேனோமயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்

(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்

(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ

(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்

(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்

வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ

கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்

பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்

பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்

நெஞ்சில் ஒரு முள்

கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ
அலைந்தாடு கடலின்திரை எனவளையு முடலும்
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்
குலைந்தோடு முகிலினிடை குளிர்மதியி னெழிலும்

சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்

எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்

பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்
களித்தாடி அவளருகில் காணவென விழைய
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்

அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்

கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே
செய்வதெது அறியாது சேவை எனதென்றேன்

நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்

கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவ தேகம்குளிர்கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தேடும் அந்திவேளை தன்னில்

மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்குமந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்

சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் கொண்டு
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் முன்னே
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்

வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழுக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதில் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கைமகள்தானோ

பொன்னுதட்டில் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்

வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்

தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்

சின்னவளே இப்படிநீ சிறுவிழிகள் கொண்டு
செந்தணலாய் வாட்டுவது செய்கை பெருந்துன்பம்
புன்னகையில் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
புற்றிலெழும் பாம்பெனவுன் பூவுடலைக் கண்டேன்

கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனிஉதட்டைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததய்யா கொல்லமனங் கொண்டேன்

அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே அழகில் நஞ்சுகொண்டு
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்து முன்னேநின்றாள்

அத்தனையும் சொத்து பணம் எண்ணி இங்குவந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை எப்படியும் செய்வேன்
இறைவனைநீ தொழுது மன இறுதிஎண்ணி நில்லும்

புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நின்றாள்
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்ததிலே ”தொடரும்’என்றுபோட
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலுடன் அணைத்தேன்

அவள் நிலவானாள்! நான் முகிலானேன்!

பொன்னென்று எண்ணினேன் பூவென்று பாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்லப் பூவல்லப் பூவையோர் கனியல்லப்
புதியதோர் பொருளுணர்ந்தேன்
கண்ணல்லக் கனியல்லக் காலை வெண் பனியல்லக்
காதலில்வேறுகண்டேன்

பொன்னல்லப் பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிமலர்த் தோட்டமாம்
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைபற்ற ஆயிரம்
குவை உண்டு என்றறிந்தேன்

சந்தணம் நாறிடும் சரிகுழல் மேனியிற்
சங்கீத வீணை கொண்டாள்
பொன்மேனி தொட்டிடப் புயல்தொடும்  பூவெனப்
பொல்லாத ராகமிட்டாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சொல்லுவள் என்றெண்ண மௌனமே
தந்தெனை ஏமாற்றினாள்
எந்நாணமின்றியே இரவிலே மதுவாகி
என்மீது தீயை வைத்தாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்காதல்ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென்  றேங்கி நின்றாள்

வெண்ணிலா வானிலே விளையாடி ஓடியே
விரைந்திடும் முகில் கலந்தால்
எண்ணமெங்கும் இவள் ஏதோநினைத்தென்னை
இதழ்மூடிப் புன்ன கைப்பாள்
விண்ணிலே தாரகை கண்சிமிட்டும் ஒரு
வேளையில் நல்லிருட்டில்
வெண்மதி நான் ஓடிவிளையாட நீமுகில்
வாவென வெட்க முற்றாள்

கன்னமிட்ட கன்னி

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல் பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!

*****************
3வது பந்தி
அலைகடல் பெரியது.......இதில்

  நீரில்லாமலேயே அலைகிறதே இவளுடலில்என்று அலையை க்காணும் அதிசயமென கூறி மீன்கள் இரண்டு  அந்தஅலையில்  தாங்களும் நீந்தவேண்டுமே என்ற புத்தி கெட்டு (மதி விட்டு)
அவள்முகத்தில் வந்திருந்தன.
வந்தபின்தான்  தம்த்வரை உணர்ந்துகொதி நீரிலிட்டதாக துடிப்பதால் (கண் இமைப்பது)  கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே

4வது
1. இழிவு எருதுடன் எடுஎறி கயிறுளன்
எனதிரு பொருள்

2.  `திருவுடன்` அதில் `வு` அழிசெய் =  திருடன்

3. உயிர்துடி ஒலியிடும் பொருள் = இதயம் (இருதயம்)


5வது

எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!(கன்னமிட்டாள்)


என் காதலுக்கு எதிரிகள்!

குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் றசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் இருகன்னச் செழுமையில் சினமெடுத்து
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நெளிவழகை பழக, இடி
மேகம் தனைமறந்து மின்னல் புவிசென்ற தென்னும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

Saturday, 31 December 2011

இயற்கையில் எழிலானவள்


மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு
எனதாசை உளம்மீது வலம் வந்ததே
 கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே

வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு
குளமான தலைதன்னை குறைசொல்லுமே
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே

நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே

கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன
கனிநூறு பலதென்று மனம்நாணுமே

பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்

இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே

வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்

எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே

குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே


கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே

ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே


தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே