Pages

Monday, 6 February 2012

காதல் மயக்கம் 1

1. மாலையின் மயக்கம்

வானமெனும் மகள்மேக இதழ்தனை
வண்ணம் சிவப்பினில் சாயமிட
தேனுமினிய பொன்மாலை யிளங்காற்று
தேடி அலைந்தென்னை தீண்டவர
ஞானம் அறியும் நற்கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் கால்பதித்தே யந்தப்
பூமிதனிலே நடந்து சென்றேன்

வானரக்குஞ்சுகள் வாழைமரம் முறித்
தோடின வாயில் பழம்திணித்து
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேர்த்தன பச்சைகிளி பறந்து
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சின மண்ணை வளர்த்ததுக்கு
கானமிடும் பலகானக் குருவிகள்
காற்றில் பறந்தன சத்தமிட்டு

வீசி அடித்தது காற்று மரத்தினி
லோடிக் குதித்தது சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன தாமரைகள்
பேசிச் சிரித்திடும் பெண்குலத்தோர் கரை
மீதிருந்தி அள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் எந்தனோர் பாதைகண்டு

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்தமுகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணினொளி சிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்டால் அந்தமூதாட்டியார்
எண்ணியென்னவென நான்நினைத்தே அயல்
ஏகமுதல் கணீரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை நின்றாள்

எங்கு சென்றாயடி சின்னவளே என்று
ஏதோ நினைத்து முணுமுணுக்க
தங்கமகள் அவர் ரண்டு உருவமும்
தன்மைகண்டு நானும் எண்ணிநின்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தொருக்கால் நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழிசிந்தும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலபல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்துகோல்
கொண்ட முதியவள் போல் குனிந்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையானொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் பார்த்திடவே
சிந்து நடைமகள் புன்னகைத்தே யெனைச்
சற்று நாணமிடச்செய்து சொன்னாள்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவானது வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை பொய்த்துவிடும்
எண்ணீயிவைஇதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
என்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னவளால் இனி ஆகமுடியலை
ஆடி நடைதளர் வாகுகிறாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படிசெல்வது நானறியேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ
என்னசெய்வேன்” என்று இரண்டுமலர்க்கரம்
ஏந்தும்விரல்கள் பிசைந்து நின்றாள்
(தொடரும்....)

காதல் மயக்கம் 2




2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவே இந்த வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை வந்ததுபொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னையவள் இனி ஒரடிகூட
எடுத்துநடந்திடும் ஆற்றல் கெட்டாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்று மயங்குகிறேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ”
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றிவளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிட பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து - அந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதேயென
ஓர்பயமில்லையென் றாற்றுவித்தேன்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொல்ல
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இந்த
ஏழை பெரிதும் உவகை கொண்டேன்

கண்ணை விழித்தனள்அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவென கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தவன் புன்னகைத்தான்
அண்ணா நீங்கள் கூடவந்திடுவீரென
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்வதென அவள்
கேட்கமனம்  கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்துநிற்குது
செங்கனியின் வண்ணமுடன் செழுமைகாணுது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று ஒளியைவீசுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூட பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்துநில்லு பக்க மென்றால் வாதம்பண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கூடியாடுது
குழந்தையாக அழுதுகொஞ்சம் கோவம் கொள்ளுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது மாளுது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றத்தோணுது
காட்டுமலர் தோற்றத்திலே கண்ணைஇழுக்குது

முன்னிரவு குளிரடிச்சு மேனி நடுங்குது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசவென்று எவருமில்லை பாவம் விதியிது
கன்னி யவள் நெஞ்சம் காணும் காதலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசொல்லுது
சேர்ந்திடலாம் என்பதனை தின்று விழுங்குது

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்விழுதலெனக்
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையில் நாடகம் கண்டுநின்றேன்

(தொடரும்)

Tuesday, 24 January 2012

இன்று மிஞ்சினள்! நாளை கெஞ்சுவள்!

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை தனை விளையென் றுழறுவள் !!

Sunday, 8 January 2012

காதலைப் பாடுவதா?

          
குருதிப் புனலும் சதையும் கொண்டே குலவும் ஒருபோதில்
மருகிக் கணமே மின்னல் போலும் மாயை சுகம் காட்டும்
உருவைத் தொழுதே தினமும் பாடும் ஒருவன் கவியாமோ
திருவைத் தொழுதலின்றி இதுவே தினமும் தொழிலாமோ?

நிலவை அழகென் றுலகில் நின்றே கண்டால் அழகாகும்
நிலவில் நின்றால் மண்ணும்தூசும் வெறுமை என்றாகும்
சிலையில் பெண்ணை வடிக்கும் சிற்பி செயலை வியந்தோரின்
கலையென் றுள்ளம் ஏற்கும் கவியில் கண்டால் பிழையாமோ

மதனை ரதியை மனதில் கொண்டால் மறுவென் றிகழ்வாமோ
அதனைப்பாட அடிகள்கொண்டால்  ஆக்கம் பழுதாமோ
எதனைப் பாடக் கவிஞன் எண்ணம் எழுமெப் பொருள்யாவும்
உதவிக் கவிதைக் கருவாய் பொருளாய் உருவம் பெறும்மாறும்

உணர்வில் உயிரில் ஊற்றும்வண்ணக் குழம்பைக் கைக்கொண்டு
கணமும் நில்லா துலகத்திரையில் காட்சி ஓவியமாய்
தணலைத் தீயைத் தண்ணீர்க் குளுமை தருமாம் எதுதானும்
கணமே தீட்டும் கலைஞன் கையில் கட்டும் விலங்கில்லை

பெண்மை அழகுஎன்றால் என்ன பிழைகள் அதிலுண்டு
பெண்ணே இல்லா வாழ்வுகொண்டார் பாரில் எவருண்டு
பெண்ணி லழகைகண்டோர் அதனைபேசல் பிழையென்றால்
மண்ணில் தமிழின் கவிகள் பலதும் மறைந்தேபோகாதோ

உலகம் எங்கே  உதயம்கொண்டாய் உந்தன் வரவறியேன்
கலகம் செய்யும் விண்ணின் தீயின் கடிதோர் சுடுகோரம்
வலமும் புறமும் இடியும் வெடியும் இவைகள் தாமறியேன்
நிலமும் கண்ட நாளில் இருந்தே உலகை நானறிவேன்

புவியில் மரமும் செடிகள் கொடிகள் மலரை நான்கண்டேன்
ரவியும் மதியும்முகிலும் விண்ணின் மீனும் நான்கண்டேன்
குவியும் விரியும் மலரில் அழகைக் கொட்டி வைத்தவரே
கவியில் காட்டும் பெண்ணிலெழிலைக் காணச்செய்கின்றார்

மனிதம் என்னும் அழகைக் கலையின் கண்ணால் அதைநோக்கி
மனதில் குற்றம் இல்லா துணர்வு கொண்டால் மகிழ்வாமே
அழகை அழகென் றுள்ளம் சொல்ல அதற்கோர் வயதில்லை
மலரை எழிலென் றெழுதும் கைகள் மாற்றம் தேவையில்லை

அழகு என்ப தெதுவும் பொருளில் இலதாம், விழிகொண்டே
பழகும் மனதின் பார்
வைகொள்ளும் உணர்வே எழிலென்றார்
மழலைசெல்வம் மடியில்தூங்கும்  அழகை விழிகாணும்
குழலில் பூவைச் சூடும் வதனம் எழிலும் அதுபோலும்

காதல் பாதிப்பு

பூவைக்காண மோகம் கொண்டு போகும் தென்றலே
 போதை கொண்டு கூடிஆசை போன பின்னரே
தேவையில்லை என்றுவிட்டுத்  தள்ளிச்சென்றதேன்
 தீயில்வெந்த தாகப் பூவும் தீய்ந்து வாடுதே

ஓடிவானில் நீந்திப்போகும் ஒற்றைமேகமே
  உண்மை காதல் கொண்டுநீயும் வெண்ணிலாவையே
தேடிவந்து முத்தமிட்டதென்றே எண்ணினேன்
  தென்றல்போல நீயும் விட்டுத் தூரச் சென்றதேன்

நீரிலாடும் ஆம்பல்மீது நின்றுதேனையே
  நீயும் உண்டுஇன்பம்காணல் நேர்ந்த பின்னரே
சேரும் எண்ணம்நீங்கி நீயும் செல்வதேனடா
  சில்லென்றூதும் வண்டே நீயும் செய்வதென்னடா

காலைவந்து வானெழுந்த காதலாதவன்
கோலம் போடும் நீரலைகள் கொண்டதாமரை
மேலெழுந்த பூமுகத்தை வாடசெய்யவதேன்
மாலைதன்னில் போயொழிந்து மோசம் செய்வதேன்

காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
 காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
 யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா

பூவில் வண்டில் புள்ளி னத்தில் போயும் மக்களில்
தாவி ஒன்றோடொன்றில் இன்பம் தேட வைத்ததேன்
தூவி நெஞ்சில் காதல் என்னும் தூபமிட்டவன்
தேவி,பெண்மை தோல்வி என்றால் தீமை காண்பதேன்

Thursday, 5 January 2012

காதல் ஓவியம்

மாலை இருள் உலகைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அது ஒரு வசந்தகாலத்தின் முன்னிரவுநேரம். கதிரோன் மறைந்து இருள் சூழ்ந்துவிட்டபோதிலும் இளங்கதிரின் விட்டுச்சென்ற வெம்மை காற்றில் இன்னும்தணியவில்லை.

அந்தச் சோலையின் மலர்களைக்கூடி நறுமணம் சுமந்த தென்றல் அங்கே
தனிமையில் நின்றிருந்த தலைவியின் கேசங்களை நீவி முகத்தில் மெதுவாக வெப்பத்தால் முத்தமிட்டுச் செல்கிறது காற்றுமட்டும்தானா?. காதலனும்தானே!
அவள் உள்ளத்தை பிரிவினால் சுட்டு வேக வைக்கிறான்!
எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது. அவள் முன்னால் இருக்கும் குளிர்த்
தடாகம் ஒன்றைப்பார்க்கிறாள். அதோ அந்த அல்லிமலர்கள் கூட சந்திரனின் வருகைக்காக அவள்போலவே தவம் கிடக்கின்றன.
அந்த அலைகள்கூட இவள் மனதைப்போல வரிசையாக எழுந்துஉணர்வுகளின் துடிப்பாக காணுகிறதே! அலைகளின் ஆட்டத்திற்கு தலையாட்டும் மலர் அவளின் மனம் அங்குமிங்கும் அலைவதையும் அதனருகே துள்ளிவிழும் கயல்மீன்கள் அவள்விழிகளின் துடிப்பையும் பாவனை காட்டி கேலி செய்வதுபோல் இருக்கின்றன.
ஆமாம் இதோ இந்தமலர்க்கூட்டம்கூட காற்றிலாடி தமக்குள் இரக்சியமாகப்  பேசிக்கொள்கின்றனவே! அவள் ஏமாற்றத்தைதானே முணுமுணுக்கின்றன
கோபம் கட்டுமீறவே பாடுகிறாள்

தேனென்று சொன்னான் தென்றலென்றான்
தீயாகி நின்றான் பெண்மை கொன்றான்
வானில் வளைந்த வண்ணம் என்றான்
வாஎன்று என்னை தன்னில் கொண்டான்
பூநின்றவாசம் போலே என்றான்
பூன்னகைபூத்தே என்னை வென்றான்
ஏனின்று என்னை ஏங்கவீட்டான்
என்ன மயங்கம் கண்டு நின்றான்

பூவாகமேனியில் போதை கண்டான்
புயலாக மாறியே புதுமை செய்தான்
நோவாகி உள்ளத்தை நெக்க வைத்தான்
நிழலாய்க் கலந்துமே சொக்க வைத்தான்
நாவான பொய்த்தே இந்நங்கை தன்னை
நலிந்தே உடல்நோக நெஞ்சம் கொண்டான்
சாவாகும் மேனியை சற்றேவந்து
காவாக்கால் தீயாகும் தேகமன்றோ!

காற்றுக்கு கட்டளை இடுகிறாள்.தென்றல் குளிர்ந்திட ஆரம்பித்துவிட்டது. நிலவும் எழுந்து பொன்னொளி பரவ
ஆரம்பித்துவிட்டான். காதல் ஏக்கம் கசப்பாக மாறுகிறது. கண்கள்
சிவந்துவிட்டன கோபத்தாலா? தூக்கத்தாலா? அப்போது அங்கே யாரோவரும்
ஓசை கேட்கிறது. அதை அறியாமல் அவள் பாடுகிறாள்

துடித்தே கண்கள் துவள்கிறதே
வெடித்தே நெஞ்சம் அழுகிறதே
வடிந்தே யிருளும் முடிகிறதே
மடிந்தே உள்ளம் குமுறுதுவே


எவளோ ஒருத்தி கண்டனனோ
இவளை மறந்து நின்றனனோ
குவளை நிறைதேன் நீயென்று
அவளை இனிதாய் கண்டனனோ

தடந்தோள் கொண்டான் தவறியதேன்
மடந்தை என்னை மறந்ததும் ஏன்
கிடந்தே யுள்ளம் துடிக்கிறதே
விடந்தான் முடிவே கொல்லுகிறேன்

அண்மையில் நின்றிருந்த அலரிப் பூச்செடியிலிருந்து ஒருகாய் பறித்து உண்ண
முயல்கிறாள். அப்போது ஒருகுரல் ஒலிக்கிறது

காதல் காதல் காதல் என்று
காதல் எண்ணிக்காயும் மகளே
காதல் போயின் சாதல் என்றால்
காற்றுக்குலகில் வேலை இல்லை

காதல் கண்டு தோற்கும் மாந்தர்
காணுமுலகில் மாளச் சென்றால்
ஊதல் மூச்சும் உயிர்கள் இன்றி
ஒற்றை உலகு சுற்றும் வீணில்

தேனை உண்டு தித்திக் காமல்
தீயை உண்ணத் தேர்ந்தாய் பெண்ணே
போனால் தேகம் பின்னே வாரா
புரியாதவளோ பொய்க்கும் வாழ்வு

தாகம் கொள்ளல் தேகக்குற்றம்
தனிமை கொள்ள மனதே நோகும்
நாகம் கக்கும் நஞ்சைப்போலே
நாளும் விரகம் தேகம்கொல்லும்

ஆகக் காதல் ஒன்றே உலகின்
ஆகிக் கொண்ட இன்பமில்லை
போகப்போக மனமே யாறிப்
புதிதாய் வாழ்வு கொள்வாய் பெண்ணே

மோதல் கொண்டு முனையும் வாழ்வில்
மூச்சை நிறுத்த முயலாதென்றும்
காதல் போயின் வாழ்வை வென்று
காலம் சொல்லும் பாதை செல்வாய்

தலைவி திடுகுற்றுத் திரும்புகிறாள். ஒரு முதியவர் நிற்கிறார். இதுயார்
இவரெப்படி இங்கே?
”யார் நீங்கள்?” என்கிறாள். முதியவர் சிரிக்கிறார். அவள் திகைக்கிறாள். இந்த
இரவு நேரத்தில். இவருக்கு இங்கே என்னவேலை. ‘யார் நீங்கள் பெரியவரே
கூறுங்கள்’
அவர் சிரித்தபடி ’உனைக் காப்பது என் வேலை’ என்று கூறிக் காற்றில்
மறைந்து போகிறார்
அந்தவேளையில் அவள் தோழிஒருத்தி தலைவியை நீண்டநேரம் காணாது
தேடிவருகிறாள். தன் தலைவி திகைத்து நிற்பதைக் கண்டு என்னவென
விசாரிக்கிறாள்.

தன் கவலையைக் கூறி அவள்மீது தலைசாய்த்து கண்களை மூடுகிறாள்
தலைவி. கண்ணிலிருந்து நீர் தாரையாக வழிகிறது.
தோழிஅவளை ஆறுதல் படுத்துகிறாள்


முடிவுக்கு அவசரம் என்ன- மேனி
மூள்கின்ற தீ கொள்ள ஆசையும் என்ன
வெறுமைக்கு மனமானபோது -சூழ்
வெள்ளிக்குள் நிலவாக தனிமைநீ காணு

துள்ளியே நிலவோடும் வானில் - ஒரு
துன்பமும் கொள்ளவே இல்லையே நாளும்
அள்ளியே புன்னகை செய்து -அது
அழகாக வானிலே வருவதைப்பாரு


அவள் மடியில் படுத்த தலைவி சோர்வு மிகுதியால் அயர்ந்து மயங்கி
கிடக்கிறாள். அப்போது மென்மையாக் தோழி பாடுகிறாள்

புவிவானை வாவென்று சொன்னால்
பொழியாதோ மழைதூவி நன்றாய்
குவிவானில் கதிர் காணும் நேரம்
குளிர்காலை எனவாக வேண்டும்
செவி கேட்க கவி சொல்லும் சேதி
சிறிதாலும் கேட்காதுபோமே
ரவி வானில் எழுந்தோடி வருவான்
இரவென்னில் கதிர் ஏது செய்வான்

தளிரெங்கும்பூப் பூக்க வேண்டும்
தண்ணீரில் முகம் பார்க்கும் போலும்
ஒளிவீச இரவோட வேண்டும்
உயிர் கொண்டமீன் துள்ளவேண்டும்
களிகூடிப் புள்ளினம் ஆர்த்து
கலகலத்தெழுந்தாடவேண்டும்
வழிதோன்றி அவன்பாதைகண்டே
வரும் வரை தூங்கட்டும் நெஞ்சம்

கனவுகள் சுமையான நெஞ்சை
காற்றாக நீந்திடச் செய்யும்
மனம்மீது கற்பனை கொண்டால்
மாற்றாகித் துன்பங்கள் நேரும்
சினந்தானும் கவலையும் போக
சிறிதே நீ உறங்காயோ கண்ணே
நினவான தமைதி கொள் என்றும்
நிலையான துலகி லொன்றில்லை

மாறுதல் மட்டுமே வாழ்வாம்
மாறாத ஒன்றெனில் சாவாம்
தேறுதல் இல்லையேல் நாமும்
தினந்தோறும் ஒருதரம் சாவோம்
ஊறுகள் எதுவந்த போதும்
உரமுள்ள மனதோடு நின்று
ஏறுதல் தான்மட்டும் எண்ணு
இயற்கையே இழப்பென்று தள்ளு

தோழியின் தாலாட்டில் துக்கம் தணிந்திடவே இருவரும் இல்லம்நோக்கிச்
செல்கிறார்கள்.. விடிந்த்தும் சேதிவருகிறது, தலைவன் வரும்வழியில் ஏற்பட்ட
இடரினால் அரசகாவலர் அவன்பாதையை தடுத்துவிட்டனர் என்றும்
தலைவியிடம் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தான்
மகிழ்வில் தலைவியின் மனம் குதிக்க எங்கிருந்தோ பெண்கள் சேர்ந்து
பாடும்பாடல் ஒலிக்கிறது. அவள் உள்ளத்தில்சேர்ந்த உறுதியும் இன்பமும் பிரதிபலிப்பதாக!

வெட்டுமிடி வீழ்ந்தாலும் வேகோம் -கையில்
விளையாட மின்னலில் பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினும் தாழோம் -அங்கு
குளித்தேயோர் சுழிபோட்டு கரைநீந்தி எழுவோம்

தட்டுவோம் கைகள் தனைக் கோர்த்து பெண்கள்
தாண்டாத இடரில்லை காதலும் சேர்த்து
கட்டுவோம் வாழ்வென்ற வீடு ஒளி
காட்டுவோம் அன்பென்ற தீபமும் கொண்டு


பெட்டியில் பாம்பாகிச் சோர்ந்து - பெண்கள்
பெருமையை மறந்துமே தூங்குதல் நீக்கி
எட்டுவோம் இமயங்கள் தாண்டி! - நாமும்
எண்ணியே உலகையும் ஆள்வோம் நிரூபி!

Wednesday, 4 January 2012

காதல் பைத்தியம்!

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?