Pages

Monday, 24 September 2012

வா என் செல்லம்!

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

Thursday, 30 August 2012

காதலர் சங்கமம்

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்
கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

Wednesday, 11 July 2012

காதல் மறந்தனையோ?

              (தலைவன் ஏக்கம்)

தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத்
தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன
பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப்
பால்வெண்ம திநீயும் போவதெங்கே
நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு
நான் கொண்ட காதலுக் கானதென்ன
தேவையும் போனதும்தென்றலென - ஓடித்
தேகம் தழுவமறுத்த தென்ன

சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள்
சாயென்று என்னை மடியிருத்தி
சாவென்றே ஒன்று வரும் வரையும் -  உன்னைச்
சார்ந்து கிடப்பேனென் றன்றுரைத்தாள்
பூவென்ற உள்ளம் பொழுதிருளப் -  பல
பொய்யென்ற வண்ணம் எடுப்பதுண்டோ
நாவென்ற பக்கம் மெல்லா உருளும் - ஆயின்
நாமென்ற அன்பு புரள்வதென்ன

காவொன்றில் கோநடை கொள்ளவந்தால் - உடன்
வா என்ன போரென்று வாள்கொண்டதென்?
பூவென்றும் தேனென்றும் காணவந்தேன் - மனம்
பொல்லாவிழி கொண்டு என்னை வென்றாய்
நீவென்ற தாயின்று யார் சொன்னதோ - என்றன்
நெஞ்சில் சிறைகொண்டேன் உன்னை இங்கே
தூவென்றென் னைவிட்டுத் தூரம்செல்ல -அந்த
தெய்வம் விட்டவழி தீர்வு என்ன?

ஓவென்று உள்ளமுனை நினைத்து - மனம்
ஓடென்று உன்னெழில் பின்னலைந்து
நாடென்று நாடிப் பறித்தெடுத்து  - உன்னில்
நானென்று ஆகுமிவ் வேளைதனில்
தாயென்று உன்னன்பு காத்துநிற்க - நீயோ
தாமென்றும் தீம்மென்று துள்ளிவிட்டு
தேயென்று திங்களின் தேய்வளித்தால் -அந்த
தெய்வத்தின் நெஞ்சும் பொறுத்திடுமோ

ஆவென்று போற்றுமுன் அன்பு தனும் - சதி
யாரென்ன செய்யினும் அற்றிடுமோ
ஆவென்றேன் என்றிடும் பொய்மொழியைச் - சொல்லி
ஆகஎன் உள்ளத்தை ஏய்த்தனையோ
வாவென்று கோவுறை ஆலயத்தில் - அன்று
வந்து நின்றே மாலைகொண்டதென்ன
ஆவது தெய்வம் நினப்பதொன்றே - நீயும்
ஆயிரம் கொண்டென்ன மாறிவிடும்

Saturday, 7 July 2012

அலரும் மலரும் அவளும்

            

(அவன் ஆற்றாமை)
ஒயிலன்ன நடை கடலின் அலைபுரைய நெளிகுழலும்
கையிலென்ன மலர் காந்தாள் காணுமெழில் மதியுறல
வெயிலென்ன விழிகூர்மை தருமான தகிப்பெழவும்,
துயிலென்ன விடுஎன்று துயர் செய்வள் நிகர்வாளின்

கொடும்வீச்சின் செயலொப்ப குளிர்காற்றின் கூர்மையது
விடும்வேலின் தகையன்ன விடலைஉடல் புயல்கடுப்ப
தொடுமலரின் கணைவீச்சில் துயரேய்ப்ப தருமிவளை
படும் கதிரின் ஒளிபுல்லின் பனியியைய உருகினவன்

(மலரின் ஆற்றாமை:)
வளையலொலி பெருகமலர் வடிவிற் றனை வென்றவளும்
அளைமேகக் கூந்தல் தனையடைய அதன்நறுமணமும்
விளையின்பம் தருநாற்றம் வியந்து மனம்சிறுமை கொள
களைபோமென் றெண்ணியுடன் கருகுவது போற்குவியும்

துளை மூங்கில் ஊதுமது தேடும்கரு வண்டிதழின்
மழைஈரம் மெழுகுஎழில் மலரிதழில் இல்லையென
இழையொத்த இடைகொடியின் இசைநளினஎழில் போதை
விளை வகையும் கண்டு தனை விடுமென்று மீளலரும்

(அவளோ)
வளைகொடியின் மலரும் கணம் மலருவதும் ஒடிவதுவும்
முளைபயிரின் பசும்தனை முகமதிடை புனையிவளும்
சுளை தேனில் ஊறும்இனி சொல்மீட்டும் கருவிமலர்
களைகொண்டு விரியும்கணம் கருவண்டில் அஞ்சிவிடும்

Sunday, 8 April 2012

மேற்கடி வான் சந்திரனோ


மேடை ஆடும் நாடகத்தின் இடைவெளிதான் - நான்
மெல்லச் சுற்றும் பம்பரத்தின் நிலையடி காண்
ஆடை மாற்றிக் கொள்வதென்ன அழகடிதான் - நீ
அன்பை மாற்றி கொண்ட தேனோ அழவடி நான்
தேடி யேதும் கொண்ட தில்லை இதுவரைதான் - நான்
தேவ ராஜ சோபை கொண்ட உருவடி காண்
பாடிப் பார்த்துங் கதவு திறக்க இலையடியேன் - உன்
பாசமுள்ள இதய வாசல் இரும்பெனவோ?

செய்துவைத்த சிலையென் றெண்ணித் தள்ளினையோ - நான்
தெருவில் வீழ்ந்து உடைந்தபோது உருகினையோ
கொய்த மலர் வாடு மென்று அறிந்திலையோ - நான்
கொட்டி விட்ட தீயில் காலை வைத்தவனோ
எய்த அம்பு பட்டு உள்ளம் சிதறியதோ - நான்
எழுந்துநிற்க உனது வானம் இருண்டதுவோ?
நெய்த சேலை மேனி கொண்ட நிலவொளியே - நீ
நீல வான மென் மனதின் பௌர்ணமியே

மானம் காக்கச் சேலைசுற்று மேனியளே - உன்
மாமன் உள்ளம் காக்க ஏது மறந்தனையே
போன காலம் மீண்டும் எண்ணி அழுதிடவோ - இப்
பொன் நிகர்த்த வாழ்வு நாளும் பழுதிடவோ
வானம் பூத்த மின்னு மந்த தாரகைகள் - என்
வாழ்வில் காண எண்ண வார்த்தை பொய்த்ததென்ன?
கான கத்தில் நள்ளி ராவில் கால்தடுக்கி - எனைக்
கருங் குழியுள் வீழ்த்திக் கண்டு சிரித்ததென்ன?


பொய் விழுந்து நெஞ்சம் என்னும் பாலினிலே - ஓர்
புகையெழுந்து நஞ்சுஎன்று மாறுவதேன்
கையெழுந்து  தெய்வமென்று நான்தொழநீ - ஓர்
காலன் போல வந்து நின்ற காட்சியென்ன?
மையெழுதும் கண்கள்கொண்ட பெண்ணிலவே - நீ
மறந்ததேது மலரவீட்டு முற்றத்திலே
செய்வதென்ன சாகசமோ தந்திரமோ -நீ
செந்நிறத்து மேற்கடி வான் சந்திரனோ

Monday, 26 March 2012

போனால் போகட்டும் போடி!

ஆனா ழானா கூனா டானா இன்னன்னா
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன

கானா நெடிலும் பக்கம் தானா  இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள

ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன

போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த்  தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன

Friday, 2 March 2012

தென்றல் விடு தூது

தென்றலே நில்லடி தேடிஅலைந்தனை
தோல்வி கண்டு துவளாதே - அன்று
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவதுவீணே - தினம்
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிவாயே - இன்று
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி எனைப் பிரியாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோம் எதனாலே - அவர்
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே - அதோ
வெண்ணில வுப்பெண்ணும் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே- அவள்
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே - நீயும்
சுந்தர மாவுல கெங்கணும் சுற்றுவை
செல்வழி என்னவர் காணின் - உடன்
இந்தவோர் செய்தியை எப்படி யாயினும்
இட்டுவி டென்னவர் காதில் - இவள்
எந்தளவோ துயர் கொண்டனள் இங்கென
உண்மை தொட்டுச் சொல்வாயே

சந்தணமேனியும் சஞ்சல மாக்கிடும்
சிந்தனை செய்மதி ரண்டும் - இவை
எந்தன்மன துடன் கொண்ட பகைத்தனில்
என்னைப் பிரிந்திடக் கூடும் -ஆயின்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும் - எனை
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும் - அதில்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சை யுடன்தீயை நாடும் - எவள்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும் - இனி
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்