Pages

Monday 26 March 2012

போனால் போகட்டும் போடி!

ஆனா ழானா கூனா டானா இன்னன்னா
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன

கானா நெடிலும் பக்கம் தானா  இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள

ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன

போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த்  தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன

Friday 2 March 2012

தென்றல் விடு தூது

தென்றலே நில்லடி தேடிஅலைந்தனை
தோல்வி கண்டு துவளாதே - அன்று
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவதுவீணே - தினம்
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிவாயே - இன்று
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி எனைப் பிரியாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோம் எதனாலே - அவர்
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே - அதோ
வெண்ணில வுப்பெண்ணும் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே- அவள்
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே - நீயும்
சுந்தர மாவுல கெங்கணும் சுற்றுவை
செல்வழி என்னவர் காணின் - உடன்
இந்தவோர் செய்தியை எப்படி யாயினும்
இட்டுவி டென்னவர் காதில் - இவள்
எந்தளவோ துயர் கொண்டனள் இங்கென
உண்மை தொட்டுச் சொல்வாயே

சந்தணமேனியும் சஞ்சல மாக்கிடும்
சிந்தனை செய்மதி ரண்டும் - இவை
எந்தன்மன துடன் கொண்ட பகைத்தனில்
என்னைப் பிரிந்திடக் கூடும் -ஆயின்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும் - எனை
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும் - அதில்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சை யுடன்தீயை நாடும் - எவள்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும் - இனி
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்