Pages

Sunday 8 April 2012

மேற்கடி வான் சந்திரனோ


மேடை ஆடும் நாடகத்தின் இடைவெளிதான் - நான்
மெல்லச் சுற்றும் பம்பரத்தின் நிலையடி காண்
ஆடை மாற்றிக் கொள்வதென்ன அழகடிதான் - நீ
அன்பை மாற்றி கொண்ட தேனோ அழவடி நான்
தேடி யேதும் கொண்ட தில்லை இதுவரைதான் - நான்
தேவ ராஜ சோபை கொண்ட உருவடி காண்
பாடிப் பார்த்துங் கதவு திறக்க இலையடியேன் - உன்
பாசமுள்ள இதய வாசல் இரும்பெனவோ?

செய்துவைத்த சிலையென் றெண்ணித் தள்ளினையோ - நான்
தெருவில் வீழ்ந்து உடைந்தபோது உருகினையோ
கொய்த மலர் வாடு மென்று அறிந்திலையோ - நான்
கொட்டி விட்ட தீயில் காலை வைத்தவனோ
எய்த அம்பு பட்டு உள்ளம் சிதறியதோ - நான்
எழுந்துநிற்க உனது வானம் இருண்டதுவோ?
நெய்த சேலை மேனி கொண்ட நிலவொளியே - நீ
நீல வான மென் மனதின் பௌர்ணமியே

மானம் காக்கச் சேலைசுற்று மேனியளே - உன்
மாமன் உள்ளம் காக்க ஏது மறந்தனையே
போன காலம் மீண்டும் எண்ணி அழுதிடவோ - இப்
பொன் நிகர்த்த வாழ்வு நாளும் பழுதிடவோ
வானம் பூத்த மின்னு மந்த தாரகைகள் - என்
வாழ்வில் காண எண்ண வார்த்தை பொய்த்ததென்ன?
கான கத்தில் நள்ளி ராவில் கால்தடுக்கி - எனைக்
கருங் குழியுள் வீழ்த்திக் கண்டு சிரித்ததென்ன?


பொய் விழுந்து நெஞ்சம் என்னும் பாலினிலே - ஓர்
புகையெழுந்து நஞ்சுஎன்று மாறுவதேன்
கையெழுந்து  தெய்வமென்று நான்தொழநீ - ஓர்
காலன் போல வந்து நின்ற காட்சியென்ன?
மையெழுதும் கண்கள்கொண்ட பெண்ணிலவே - நீ
மறந்ததேது மலரவீட்டு முற்றத்திலே
செய்வதென்ன சாகசமோ தந்திரமோ -நீ
செந்நிறத்து மேற்கடி வான் சந்திரனோ