Pages

Monday 1 October 2012

என்ன மாயமோ

கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
  காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
  வண்ணம் மறைந்து கொண்டாள் 
திண்ணமிதே அந்த தென்றலென விழி
  தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
   பாதியென் றாகிவிட்டாள் 
    
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
  காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
  பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
  எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
  கண்டு திகைத்துநின்றேன்

பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
  போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
  தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
  அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
  சுட்டும் வழிநடந்தேன்
 
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
  தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
  கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
  தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
  காண்சுகம் அல்லவென்றாள்

சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
  செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
  நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
  தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
   சித்தம் பிழற வைத்தாள்

0 comments:

Post a Comment