Pages

Tuesday 3 January 2012

நெஞ்சில் ஒரு முள்

கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ
அலைந்தாடு கடலின்திரை எனவளையு முடலும்
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்
குலைந்தோடு முகிலினிடை குளிர்மதியி னெழிலும்

சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்

எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்

பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்
களித்தாடி அவளருகில் காணவென விழைய
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்

அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்

கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே
செய்வதெது அறியாது சேவை எனதென்றேன்

நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்

0 comments:

Post a Comment