Pages

Tuesday 3 January 2012

கன்னமிட்ட கன்னி

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல் பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!

*****************
3வது பந்தி
அலைகடல் பெரியது.......இதில்

  நீரில்லாமலேயே அலைகிறதே இவளுடலில்என்று அலையை க்காணும் அதிசயமென கூறி மீன்கள் இரண்டு  அந்தஅலையில்  தாங்களும் நீந்தவேண்டுமே என்ற புத்தி கெட்டு (மதி விட்டு)
அவள்முகத்தில் வந்திருந்தன.
வந்தபின்தான்  தம்த்வரை உணர்ந்துகொதி நீரிலிட்டதாக துடிப்பதால் (கண் இமைப்பது)  கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே

4வது
1. இழிவு எருதுடன் எடுஎறி கயிறுளன்
எனதிரு பொருள்

2.  `திருவுடன்` அதில் `வு` அழிசெய் =  திருடன்

3. உயிர்துடி ஒலியிடும் பொருள் = இதயம் (இருதயம்)


5வது

எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!(கன்னமிட்டாள்)


0 comments:

Post a Comment