Pages

Tuesday 3 January 2012

அவள் நிலவானாள்! நான் முகிலானேன்!

பொன்னென்று எண்ணினேன் பூவென்று பாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்லப் பூவல்லப் பூவையோர் கனியல்லப்
புதியதோர் பொருளுணர்ந்தேன்
கண்ணல்லக் கனியல்லக் காலை வெண் பனியல்லக்
காதலில்வேறுகண்டேன்

பொன்னல்லப் பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிமலர்த் தோட்டமாம்
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைபற்ற ஆயிரம்
குவை உண்டு என்றறிந்தேன்

சந்தணம் நாறிடும் சரிகுழல் மேனியிற்
சங்கீத வீணை கொண்டாள்
பொன்மேனி தொட்டிடப் புயல்தொடும்  பூவெனப்
பொல்லாத ராகமிட்டாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சொல்லுவள் என்றெண்ண மௌனமே
தந்தெனை ஏமாற்றினாள்
எந்நாணமின்றியே இரவிலே மதுவாகி
என்மீது தீயை வைத்தாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்காதல்ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென்  றேங்கி நின்றாள்

வெண்ணிலா வானிலே விளையாடி ஓடியே
விரைந்திடும் முகில் கலந்தால்
எண்ணமெங்கும் இவள் ஏதோநினைத்தென்னை
இதழ்மூடிப் புன்ன கைப்பாள்
விண்ணிலே தாரகை கண்சிமிட்டும் ஒரு
வேளையில் நல்லிருட்டில்
வெண்மதி நான் ஓடிவிளையாட நீமுகில்
வாவென வெட்க முற்றாள்

0 comments:

Post a Comment