Pages

Tuesday 3 January 2012

காதலெனும் போர்க்களத்தில்

காதலன்:
போரில்பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்துவிட்டேன்
நேரில்இவள்விழிப் பார்வைஉடல்படக் காயமடைந்துவிட்டேன்
தோளில்தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங்குகிறேன்

சூழும்வினைசெய் சுந்தரியோஇவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ

காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்

அன்னைதனும் எண்ணங்கொள்ளாவிடமது எங்கும்கண்ணைவிடுத்து
என்னஅணிந்தும் ஒன்றில்லாதாய்மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே

(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்

(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில்வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம்எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை

காதலன் (மனதுள்)
கண்ணில்மலரும் கனியிதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கை படைத்ததென்ன இவள்பேசரும்பொற்குடமே
எண்ணஉடல்துடித் தேனோமயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்

(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்

(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ

(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்

(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்

வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ

கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்

பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்

பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்

0 comments:

Post a Comment