Pages

Tuesday 3 January 2012

என் காதலுக்கு எதிரிகள்!

குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் றசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் இருகன்னச் செழுமையில் சினமெடுத்து
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நெளிவழகை பழக, இடி
மேகம் தனைமறந்து மின்னல் புவிசென்ற தென்னும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!

0 comments:

Post a Comment