Pages

Thursday 20 October 2011

இனிய ஏமாற்றம்

ஏக்கம்
நான்பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு
வீட்டினிலே அன்புக் கூட்டினிலே
நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே

வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே நினைவானதிலே
கானத்திலே இழைராகமெனத் தினம்
காணும் இளையவள் போனதெங்கே?
மீனதிலே விழியானதென துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை

சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே ஒளியாகியதேன்
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?

காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனக் காதலைத் தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்

தேனெனவே ஒளிப் பாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.

இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?

எட்டாத கனியா இவள்?

ஆலை கொண்ட வேகும்சூழை
அதன்மே லிரும்பெனவே
வேலை விட்டுப் போகும் வெய்யோன்
வெந்தே சிவந்தபடி
தோலைஉரித்து தொங்கச்செய்த
மேகக் கூட்டமதுள்
காலைவிட்டுக் கடந்தேசென்று
கடலில் வீழ்ந்துருண்டான்

பாடும் பறவை ஒடும் நதியும்
படரும் இனிதென்றல்
கூடும் சுகமும் கொண்டேநின்றாள்
குமுதமென அவளும்
தேடும் சுகமும் திங்கள்வதனம்
தேவை என்றுரைக்க
ஆடும்விழியில் அஞ்சும்மொழிகள்
ஆயிரமா யிசைத்தாள்

சேரும்கண்கள் சொல்லும் உறவில்
செழுநீர்க் கமலமென
சோரும் வதனம் சிதையக்கூந்தல்
திங்கள் மறையுதென
வாரும்முடியை அந்தோ காற்று
வானக்கரு முகிலோ
நேரும்மதியின் மறைவை எண்ணி
நீவிச் சென்றதுவே

மாலைகாற்றில் மனதுக்கினிய
மரகத ரூபவண்ண
சேலைகொண்ட சுந்தரிகொட்டும்
சொல்லின் சுவைகண்டே
வேலையொத்த விழிகள் குத்தும்
வேதனை சுவைபடவே
மேலைத் திசையின் மேகச்செம்மை
மோக எழில் கண்டேன்

தேனை தவறி குங்குமச் சிமிழில்
தெரியா மற்போட்டார்
மீனைசெய்து மேகத் திங்கள்
மீது விழி வைத்தார்
யானைத் திமிரை மேனிக்களித்து
யாரோ தவறு செய்தார்
மானைக் கண்ணில் மருளச் செய்து
மற்றோர் தவறு செய்தார்

சேனைப் படைகள் செய்யும்போரைத்
தேகங் கொள்ள வைத்தார்
வீணை மீட்டவிரலைத் தந்து’
விதியைப் போட்டுவைத்தார்
பானைசெய்யும் பதமாய்மேனி
பார்த்துச் செய்தவனோ
ஏனோ நெஞ்சில் ஏக்கம் வைத்து
எட்டாக் கனிவைத்தான்

மேகப் பஞ்சைப் பிய்த்தேகொண்டு
மின்னல் தொட்டுமுகம்
ஆகச்செய்தார் அதனின்பின்னால்
அதிரும் மழைமுகிலாய்
தோகை கூந்தல்வைத்தே பெரிதாய்
தோன்றும் இடிமின்னல்
நோகத்தான் னென்நெஞ்சில்வைத்தான்
நீதிக் கழகாமோ?

கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்
எண்ணம் யாவும் நிற்பாள் இவளோ
என்னைப் பார்த்துவிடில்
மண்ணில் பிறவிப்பாவம் மறைந்தே
மாதவன(ள)டி சேர்வேன்

அணைக்காத காதல் நெருப்பு !

ஓடிவந் துள்ளமதை உத்தமரேஅணைத் தென்ன
உடல்சிலிர்க்க ஒருமுத்தம்ஊருறங்கத் தந்தென்ன
நாடிமலர்மேனியிடை நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென் நல்மனதைக்கெடுத்ததென்ன
ஆடிவரும் தேனே அழகுச்சிலை அமுதே
அன்பேயென் றாயிரமாய் அழைத்துமகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை குலவிகளித்தபின்னர்
கோதையிவள் குமுறியழக் குடிபோனதெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளு மணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாட்டமுறத் தவித்திடவே செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானும் விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேர்க்காதோ

வானவில்லி னேழுவகை வண்ணம் வெளுத்திருக்க
வட்டநிலா பொட்டல்வெளி வரண்டமண்ணாய் தெரிய
தேன்மலரில் வாசமிலை தென்றல் தொடக் கூதலிலை
தின்னவெனக் கனிபிழியத் திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று கொள்ளா நடைதளர
குழந்தையது மழலை சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து எரிமலையாய் சிதைவதுவோ

காதலெனும் நோயில்..!

மாலையிலே வண்டுறங்கும் மதுவழியும் பூவுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல் மணம் கண்டு றங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மயலெழுதி
நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில்வாராயோ
வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று
விரகமிடும் பனிவிலக வெம்மை தாராயோ
கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார்
கூடுமொரு வான்முகிலாய் குலவ வாராயோ
பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே
பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே

பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும்
போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே
ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே
ஆ உயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே
கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா
குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே
ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன
ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றது மின்றே!

நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன
நீயிருந்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே
கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன்
கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே
வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு
வேதனையில் கூவுகிறேன் விடிவு தாராயோ
வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன்
வாழ்வில் இவள் முடியமுன்னே வந்துவிடாயோ

இவர்கள் காதலராம் !

அவள் அழகு:

திரிந்த இடையும் தேனுறை இதழும்
சரிந்தகுழலும் சந்தன நுதலும்
விரிந்தமார்பும் வியனுறுமொழியும்
வரிந்தஇளமை வளமுடன் அவளாம்!

எரிந்த கதிரோன் எழுவான் வண்ண
தெரிந்த நீலத் திருவிழிப் பார்வை
புரிந்துஅவளோ புன்னகைகொள்ள
பரிந்துஇளகும் பார்ப்போர் உள்ளம்!

சிரித்தபோது செவ்வாய் மலர்கள்
விரித்த தோகை வெண்பனி பஞ்சை
உரித்த தேகம் உஞ்சலின் சுகமும்
எரித்த பொன்னாய் இளமையின் மின்னல்!

குனிந்த மாவின் கூர்கொள் கனியின்
கனிந்த மேன்மை கையணை கொண்டு
பனித்த மலரென் பட்டெனும் மிருதும்
இனித்த இளமை எடுத்தவள் பாவை!

அவன் வலிமை:

கடுத்த ஆண்மை கறுத்த உடலும்
எடுத்த மரமென் இயல்புறு கைகள்
மிடுக்கும் இளகா மென்மையின் எதிரி
விடுத்த வலிமை கொண்டவன் அவனே!

புடைத்த தோளும் புலிபோல் நடையும்
உடைத்த வன்மை ஓங்கிய ஆண்மை
அடைத்த குரலும் அழகில் கவியும்
படைத்த அவனோ பட்டறை இரும்பே!

அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

இவர்களே காதலராம்:

விருப்பமுற்று வியந்திடவருகே
பொருத்த மற்று பொன்னு டன்சேர
இரும்பை உருக்கி இழைவது போன்றும்
கரும்பை வேம்பில் கலப்பது போன்றும்

மதனும் ரதியும் மலர்களைத் தூவி
இதமும் மனமும் ஏற்புற வைத்து
எதை யும்பாரா இனிதே சேரும்
விதமாய் செய்யும் விந்தையாம் காதல்

காதலர் கனவு

தேனுலவும்  திங்கள்வரும் தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி  என்னருகே வந்தாள்
கானுலவும் மானெனவே களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள் குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியால் கொன்றாள்

வானிலவே உள்ளமது வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு
கானிலெழும் மின்மினிகள் கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின் தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு

தித்திப்பை நாவறியும் திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு
முத்துக்கள் கொட்டியதாய் முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு

வெற்றிலையை நீகுதப்ப விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க      
பற்றும் விரல் பத்தெனவே படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ
சுற்றிச் சிவந்தஇதழ் சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலர் நீர்பூக்குளத்தில் வீழ்வோம்