Pages

Thursday 20 October 2011

காதலர் கனவு

தேனுலவும்  திங்கள்வரும் தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி  என்னருகே வந்தாள்
கானுலவும் மானெனவே களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள் குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியால் கொன்றாள்

வானிலவே உள்ளமது வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு
கானிலெழும் மின்மினிகள் கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின் தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு

தித்திப்பை நாவறியும் திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு
முத்துக்கள் கொட்டியதாய் முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு

வெற்றிலையை நீகுதப்ப விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க      
பற்றும் விரல் பத்தெனவே படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ
சுற்றிச் சிவந்தஇதழ் சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலர் நீர்பூக்குளத்தில் வீழ்வோம்

0 comments:

Post a Comment