Pages

Thursday 20 October 2011

இவர்கள் காதலராம் !

அவள் அழகு:

திரிந்த இடையும் தேனுறை இதழும்
சரிந்தகுழலும் சந்தன நுதலும்
விரிந்தமார்பும் வியனுறுமொழியும்
வரிந்தஇளமை வளமுடன் அவளாம்!

எரிந்த கதிரோன் எழுவான் வண்ண
தெரிந்த நீலத் திருவிழிப் பார்வை
புரிந்துஅவளோ புன்னகைகொள்ள
பரிந்துஇளகும் பார்ப்போர் உள்ளம்!

சிரித்தபோது செவ்வாய் மலர்கள்
விரித்த தோகை வெண்பனி பஞ்சை
உரித்த தேகம் உஞ்சலின் சுகமும்
எரித்த பொன்னாய் இளமையின் மின்னல்!

குனிந்த மாவின் கூர்கொள் கனியின்
கனிந்த மேன்மை கையணை கொண்டு
பனித்த மலரென் பட்டெனும் மிருதும்
இனித்த இளமை எடுத்தவள் பாவை!

அவன் வலிமை:

கடுத்த ஆண்மை கறுத்த உடலும்
எடுத்த மரமென் இயல்புறு கைகள்
மிடுக்கும் இளகா மென்மையின் எதிரி
விடுத்த வலிமை கொண்டவன் அவனே!

புடைத்த தோளும் புலிபோல் நடையும்
உடைத்த வன்மை ஓங்கிய ஆண்மை
அடைத்த குரலும் அழகில் கவியும்
படைத்த அவனோ பட்டறை இரும்பே!

அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

இவர்களே காதலராம்:

விருப்பமுற்று வியந்திடவருகே
பொருத்த மற்று பொன்னு டன்சேர
இரும்பை உருக்கி இழைவது போன்றும்
கரும்பை வேம்பில் கலப்பது போன்றும்

மதனும் ரதியும் மலர்களைத் தூவி
இதமும் மனமும் ஏற்புற வைத்து
எதை யும்பாரா இனிதே சேரும்
விதமாய் செய்யும் விந்தையாம் காதல்

0 comments:

Post a Comment