Pages

Thursday 20 October 2011

எட்டாத கனியா இவள்?

ஆலை கொண்ட வேகும்சூழை
அதன்மே லிரும்பெனவே
வேலை விட்டுப் போகும் வெய்யோன்
வெந்தே சிவந்தபடி
தோலைஉரித்து தொங்கச்செய்த
மேகக் கூட்டமதுள்
காலைவிட்டுக் கடந்தேசென்று
கடலில் வீழ்ந்துருண்டான்

பாடும் பறவை ஒடும் நதியும்
படரும் இனிதென்றல்
கூடும் சுகமும் கொண்டேநின்றாள்
குமுதமென அவளும்
தேடும் சுகமும் திங்கள்வதனம்
தேவை என்றுரைக்க
ஆடும்விழியில் அஞ்சும்மொழிகள்
ஆயிரமா யிசைத்தாள்

சேரும்கண்கள் சொல்லும் உறவில்
செழுநீர்க் கமலமென
சோரும் வதனம் சிதையக்கூந்தல்
திங்கள் மறையுதென
வாரும்முடியை அந்தோ காற்று
வானக்கரு முகிலோ
நேரும்மதியின் மறைவை எண்ணி
நீவிச் சென்றதுவே

மாலைகாற்றில் மனதுக்கினிய
மரகத ரூபவண்ண
சேலைகொண்ட சுந்தரிகொட்டும்
சொல்லின் சுவைகண்டே
வேலையொத்த விழிகள் குத்தும்
வேதனை சுவைபடவே
மேலைத் திசையின் மேகச்செம்மை
மோக எழில் கண்டேன்

தேனை தவறி குங்குமச் சிமிழில்
தெரியா மற்போட்டார்
மீனைசெய்து மேகத் திங்கள்
மீது விழி வைத்தார்
யானைத் திமிரை மேனிக்களித்து
யாரோ தவறு செய்தார்
மானைக் கண்ணில் மருளச் செய்து
மற்றோர் தவறு செய்தார்

சேனைப் படைகள் செய்யும்போரைத்
தேகங் கொள்ள வைத்தார்
வீணை மீட்டவிரலைத் தந்து’
விதியைப் போட்டுவைத்தார்
பானைசெய்யும் பதமாய்மேனி
பார்த்துச் செய்தவனோ
ஏனோ நெஞ்சில் ஏக்கம் வைத்து
எட்டாக் கனிவைத்தான்

மேகப் பஞ்சைப் பிய்த்தேகொண்டு
மின்னல் தொட்டுமுகம்
ஆகச்செய்தார் அதனின்பின்னால்
அதிரும் மழைமுகிலாய்
தோகை கூந்தல்வைத்தே பெரிதாய்
தோன்றும் இடிமின்னல்
நோகத்தான் னென்நெஞ்சில்வைத்தான்
நீதிக் கழகாமோ?

கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்
எண்ணம் யாவும் நிற்பாள் இவளோ
என்னைப் பார்த்துவிடில்
மண்ணில் பிறவிப்பாவம் மறைந்தே
மாதவன(ள)டி சேர்வேன்

0 comments:

Post a Comment