Pages

Monday 24 September 2012

வா என் செல்லம்!

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

0 comments:

Post a Comment