Pages

Monday 12 September 2011

ஏக்கம்!

வேலால் வேலால் எறிந்தாள் விழியாற் கொன்றாள்
வேகும் தீயைத் தேகம் கொள்ளச் செய்தாள்
பூவால் பூவால் கணைகள் கொண்டே எய்தாள்
பூவில் தீயை ஏற்றிப் போரைச் செய்தாள்

பாலாய் பாலாய் பழமாய் கனியாய் நின்றாள்
பாவை விழிகொண் டுண்ணத் தன்னைத் தந்தாள்
நாலை நாலாய் பெருகும் வயதைக் கொண்டாள்
நாவில் இனிதே தமிழைக் குயிலாய் சொன்னாள்

நூலாய் இடையும் நெளிந்தே குறுகிக் கொண்டால்
நோகும் உடலே என்றேன் என்னில் சாய்ந்தாள்:
பாவாய், பாகாய், பனியாய் உருகும் ஒன்றாய்
படரும் கொடியாய் நெளிந்தே குழைந்தே சோர்ந்தாள்

காயாய் பழமாய் காணும் உருவத் தெழிலாள்
கன்னிப்பருவம் கொண்டே மலராய், இதழாய்
தேயும் வளரும் நிலவாய்த் தென்றல் குளிராய்
தேகம் எங்கும் பொங்கும் உணர்வைத் தந்தாள்

வாராய் அருகில் வந்துவ சந்தம் வீசாய்
வானத் துளிகள் தூவும் நிலமென் றாவாய்
பாராய் கண்கள் மோதிக் கொள்ளும் போராய்
பாதிச்சமரில் தோற்றுத் தழுவும் பாங்காய்

நீயாய் நானும் நின்னை எனதாய்க் கண்டே
நிற்போம் வெயிலும் நிலவும் சேரும் ஒன்றே!
ஆகா ததுவே இருளும் தருமே என்றாள்
அணைத்தேன் நிழலை அவளோ விலகிக்கொண்டாள்

நோயாய் மனதில் வலியைத் தந்தே சென்றாள்
நொடியில் திரும்ப மருந்தாய் வந்தே நின்றாள்
தாயாய் அன்பும் தனிமைத் துணையும் தந்தாள்
தழலாய் எரியுபோழ்தே நீராய் வீழ்ந்தாள்

மேகம் எங்கும்தாவிகொள்ளும் மின்னல்
மேலே நீவித் தூண்டிச் செல்லும் தென்றல்
தாகம் என்றால் நாவில் தாவும் தண்ணீர்
தன்னில் யாவும் கொண்டாள் தன்னைத் தந்தாள்

ஓடும் உருளும் உலகில் எங்கும் துன்பம்
உரிமை யில்லா வாழ்வில் எதுவும் அச்சம்
வாடும் மனதுள் மக்கள் எண்ணித் துயரம்
வந்தா லிவளோ வாழ்வில் தோன்றும் ஒளியும்

0 comments:

Post a Comment