Pages

Monday 12 September 2011

இயற்கையும் இவள் கண்டு...

குழல்நாதம் மணியோசை குரலீது அன்றோ
குறுமணியில் அசையுவிழி குறுகுறுத்த வண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளு துளமோ
 
அலைநடுவில் தலைகுனியுமல்லி இவள்கண்டோ
அதுநடன மாடியது இவள்நடைப யின்றோ
தொலைநின்று விரியும்அலை தொடும்விரல்கள் பட்டோ
துள்ளுமிளமான் இவளின் துள்ளல்தனைக் கற்றோ
 
படர்வானில் முகில்வந்துபாவையிவள் மென்மை
பார்த்தேங்கி அடிவானில் போய்கிடந்த தன்றோ
சுடரோனும் விழிகண்டு ஒளிதானி தென்று
சுடுவானி லிருந்தோடி சோர்ந்துகடல் விழுமோ
 
மழைபொழிய நதிபொங்கும் மனதிலுணர் வதுவோ
மதுமலரும் மணமிவளின் உடல்கண்டு விழுமோ
வளையலிசை கவிபாட வந்த இளங்குயிலோ
வலை தன்னில் மீனுமிவள் விழிகண்டு புகுமோ
 
வெளிவானில் தனியாக விளையாடும் நிலவும்
வீசுமிளங் காற்றெழுந்து விரையவரும் சுகமும்
தளிர்மேனி இழைந்தஎழிற் தாமரையின் கன்னி
தவளுமிளம் புன்னகையில் தாகமெழச் செய்தாள்

கருந்தேளில் கொடியதெனும்காதல் நோய் என்னை
கடுகேனும் அணுகாது காத்துவிடு பெண்ணே
வருந்தாகம் அருந்தாமல் வாழுமுயிர் இல்லை
மருந்தாக இல்லாமல் மதுவாகி நீவா !

0 comments:

Post a Comment