Pages

Monday 12 September 2011

மான் என்பதா? தேன் என்பதா?


நீல விழிகொண்டு கண்டாள் - என்
  நெஞ்சில் நெருப்பினைத் தந்தாள்
பாலமு தாய்இதழ் கொண்டாள் - ஒரு
 பார்வை யிலே எனை வென்றாள்
 
ஏனிவள் பூமியில் வந்தாள் - என்
    ஏழைமனம் கொய்து கொண்டாள்
தானினிப் பாளெந்தன் உள்ளம் - தனை
   தத்தளிக்க மெல்லக் கொன்றாள்
 
தேனிவள் என்றிடில் வண்டால்- ஒரு
 துன்பம் இழைந்திடு மன்றோ
மீனிவள் கண்களோ என்றால் - அது
   மண்ணில் துடிப்பது நன்றோ
 
மானிவள் துள்ளலே என்றால்- அந்த
   மாஅரி பாய்ந்திடு மன்றோ
வானில்நி லவுபோல் என்றால்- அவள்
  வாழ்வுதொ லைவாகு மன்றோ
 
பூவெழில் கொண்டவள் என்றால் - பூ
   மாலையில் வாடிடு மன்றோ
மாவின்சு வைகனி என்றால் - கிளி
   மங்கையைத் தீண்டிடு மன்றோ
 
பஞ்சுடல் மென்னிளம் மேனி - எனில்
   பஞ்சுப றந்திடு மன்றோ
நெஞ்சு தவிப்பதைக் கண்டால் - என்
     நிம்மதி போயிடு மன்றோ
 
தெங்கென ஓடிவ ளர்ந்தாள் - பல
  தீஞ்சுவை இன்பம் பகிர்வாள்
எங்கிருந்தோ இவள் வந்தாள் - எனை
   எத்துணை பித்தனாய் செய்தாள்

மங்கி மறையும் பகலாய் - என்
   மாபெரும் வன்மை கரைத்தாள்
செங்கனி தேடிடும் வண்டாய் - தனைச்
    சுற்றிடச் செய்தாள் தகுமோ?

0 comments:

Post a Comment