Pages

Monday 12 September 2011

கிராமத்துக் காதல்

செந்தாளம் பூவெடுத்து சிங்காரகொண்டையிட்டு
என் வாழ்வைபங்குபோட்ட பாவையே
பன்னாடை கள்வடித்து பருகிதோ அலுத்ததடி
உன்னாசைஅன்பில் கள்ளை ஊற்றடி

பொன்மாலை தூங்கும் ஒரு சிங்கார வெண்கழுத்தின்
முன்னாலே மூடிவைத்த தாமரை
தென்னோலை காற்றிலாட திங்கள் மேனி தெரிவதுபோல்
உன்னாடைக் குள் மறைத்த தேனடி?

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து சிங்காரக் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி

பந்தாடும் பைங்கிளியே பாவக்காய் பந்தலுக்கு
முன்னாலே நின்று முத்தம் தந்ததும்
இந்தாடி என்னவென்று என் மாமி கேக்கையிலே
முள்ளாலே சேலை போச்சு என்றதும்

தேங்காய் உரித்துமட்டை  தென்னையோடு கொட்டிவைக்க
பாம்பொன்று ஆடுதையோ என்றதும்
ஏங்கிநானும் ஓடி உன்னை என்னவென்று கேட்டுவர
வாங்க மச்சான் காதலிப்போம் என்றதும்

காவோலை துக்கியொரு கால் மிதிக்கும்போதினிலே
வாயோரம் வெத்திலையை போட்டதும்
ஆவென்று கூறி உந்தன் அமுதமதை ஊட்டிவிட்டு
காதோரம் இரகசியங்கள் சொன்னதும்

பச்சைவயல் குளத்தினிலே உச்சிவேளை குளிக்கையிலே
இச்சையோடு வேட்டிசட்டை கொண்டதும்
பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
நிற்கவிட்டு கேலி செய்தும் கொண்டதும்

அடைத்தவேலி  கிடுகிருக்கும் மறைப்பினிலே நீகுளிக்க
படபடக்கும் மனது கொண்டு நின்றதும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறும்பினிலேபொய்யுரைத்து  கொன்றதும்

அத்தனையும்செய்து என்னை ஆசை கொள்ள வைத்தவளே
எத்தனைநாள் காக்கத் தாலி கட்டியே
பக்கத்திலே வைத்திருந்து பத்துவிரல் கொண்டணைத்து
மொத்தம்கொள்ள போவதென்று சொல்லடி!

0 comments:

Post a Comment