Pages

Monday 12 September 2011

காதலைப் பகிர்ந்த காதலி !

வண்ண நிலவைப்பிழிந்தெடுத்து அதை
வார்த்தவள் மேனிசெய்தான்
வெண்ணெழில் மேகப் பஞ்செடுத்தேயவள்
மேனி திரள வைத்தான்
கண்ணில் கவரும் காந்தமதைக் கொண்டு
காதல்செய்ய அழைத்து
பெண்ணில் அழகில் பித்தனென்றாகிட
என்னை மயக்கிவிட்டாள்

கூந்தல் முகர்ந்து கொள்நறு வாசத்தில்
உள்ளதெல்லா மிழந்தேன்
ஏந்திழை காணிடை ஏங்கியெழுவரி
தூங்கிமனம் இளைத்தேன்
காந்தள் மலர் எனும்கைவிரல் பட்டிட
காணும் உலகிழந்தேன்
பூந்தளிர் மேனியில் பொய்கை குளிர்தரும்
ஆனந்தபோதை கண்டேன்

ஆயினும் இன்றவள் என்னை மறந்தவன்
அன்பினுக்காகிவிட்டாள்
போயவன் பக்கம் இருந்து எனதன்பை
தூசென விட்டுவிட்டாள்
சேலை இழுத்தவன் செய்யும் குறும்புக்குச்
சிந்தை பறி கொடுத்தாள்
பாயில் படுத்தவன் பக்கம் அணைத்துநீ
தேனென கொஞ்சுகிறாள்

மாயம் புரிந்தவன் மேனிஅழைந்தவள்
மார்பினில் தூங்குகையில்
நீயில்லையேல் இனிநானில்லை என்று
நீலி பசப்புகிறாள்
ஆவிதுடித்தவள் ஆற்றும் செயல்கண்டு
மேனி துடித்து நின்றேன்
பாவி என்னை மறந்தாயடி நீதியோ
பண்ணுவதேது என்றேன்

பூவிதழ் தன்னிலும் மெல்லியளால் ”அவன்
ஆழ்ந்து உறங்குகையில்
பாதி இரவினில் நான் வருவேன் இன்பம்
பார்த்திடுவோம்” என்கிறாள்
நானென்ன செய்வது நானிலத்தில் இந்த
கோதையரை நம்பியே
ஆண்படும்பாடு அறிந்து சரியென
ஓர் பதில் சொல்லிவிட்டேன்

போனது நேரம் பூமகள் இன்னமும்
காணவில்லை அவனோ
ஏனோ விழி மூடிதூங்கவில்லை என
எண்ணி பொறாமை கொண்டேன்!
நேரம் கடந்தவள் ஓடிவந்தாள் எந்தன்
நெஞ்சில் தலை புதைத்தாள்
ஆரத்தழுவி அவள்முகம்தாங்கி
ஆனது என்ன என்றேன்

தேனிதழால் ஒருமுத்தம்தந்து உங்கள்
செல்லமகன் குறும்போ
தாவியணைத்தென்னை ஓர்கணமும்
பிரியாத அன்பு கொண்டான்
ஆக அவன்இந்த அப்பாவுக்கு மகன்
தப்பாமல்தான் பிறந்தான்
தூங்க வைத்தே அவன்தொட்டிலில் இட்டிட
போதும் என்றாகிவிட்டேன்

நான் சிரித்தே அவள் நல்முகம் நோக்கி
எம் வாழ்வில் இனிமை தந்த
ஆனதொரு வயதான மழலை உன்
தேனிதழ் முத்தங்களை
பாதிதிருடி தன்பால் நறுவாசம்கொள்
ஈர்கன்னம் கொண்டான் என்றேன்
மீதி இன்னும்நூறு உள்ளதென்று விழி
மூடி இதழ் இணைத்தாள்:

0 comments:

Post a Comment