போனது காரிருளும்
தீக்குளித்து ஒருசெந்நிற மேனியன்
திக்கில் கிழக்கெழுந்தான்
நோக்கிஅவன் வரவெண்ணி மலரொன்று
நெய்யிதழ் தானவிழ்க்க
போக்கில் பறந்திட்ட போதைகொண்ட வண்டு
பூவைச் சுவைக்க வந்தான்
வேர்த்து இளைத்திட்ட பூவெனும் பொன்மகள்
விம்மியே நீர் சொரிய
காற்றெனும் காவலன் கண்டு சினம்கொண்டு
கற்பினைக் காக்கஎண்ணி
சீற்றமுடன் விசைகொண்டு குலுக்கிட
சென்றது வண்டெழுந்து
போற்றி மனம்நன்றி கூறிக் கொடிமலர்
பூரிப்பிலாடி நின்றாள்
வார்த்தை யொன்று அந்தபூமகள் கூறவே
வானத் தலையும்வளி
நீர்குளமாகிய விம்மும் மலர்கொண்ட
நேசமுரைப்பதற்கு
தேர்சில்லு இல்லா ரதமெடுத்துக் கீழைத்
திக்கி லுயர்ந்து வரும்
கூர்த்தஒளியுடை ஆதவனைக் காண
கூவியே விண்ணெழுந்தான்
பார்த்திருந்த பகை மேகமொன்று
பழியானது கொண்டயலில்
சேர்ந்தொளி வெய்யோன்வழி மறைத்தேயிடை
சென்றுமுன்னே தவழ
கார்த் திரள்மேகம் கறுத்தவனோ ஒருகாதல்
மலரில்கொண்டு
நீர்த்துளிகள் என்னும் நீள்கரம் நீட்டியே
நீவித்தழுவிகொண்டான்
போர்க்குணம் கொண்டவன்காற்றும் சினம்கொண்டு
பொல்லாச் சுழலெடுத்து
ஆர்த்தெழுந்தே அவன் ஆடியவேகத்தில்
அண்டம் கிடுகிடுத்தே
சேர்ந்தமுகில் விரைந்தொடியே போனது
தெற்குத்திசை வழியே
தேக்குமரங்களும் மூங்கில் அடர்ந்திடும்
திக்கினை நாடியதாம்
காலையில் பூவிடம் கண்ணியம் காத்திட்ட
காதலன் சூரியனோ
மேலை வானமெழ கொண்டபொறாமையில்
மேனி அனல் தெறிக்க
ஆலை உருக்கு மிரும்பெனச் சுட்டனன்
ஆதவன், காற்றிவனோ
சோலைமலருக்கு பொய்கை குளிர்கொண்டு
தேகம் துடைத்துவிட்டான்
பூவையின் காவலன் போதுமினிஅவள்
பட்ட துயரமெல்லாம்
பாவையின் உள்ளம் பரிதவிக்கு மவள்
பாசமிருந்த தென்றால்
தேவை நிரந்த காவலெனில் அவள்
தேடும் துணை கொடுப்பேன்
சேவைசெய்வேன் அவள் சித்தமென்றால் காதல்
செய்யும் மனமிருந்தால்
சின்னமலரதும் எண்ணியது தென்றல்
செய்திடும் வீரமெல்லாம்
என்ன சினம்கொண்டு ஓங்கிஅடித்திடும்
உள்ளம் வருடுவதும்
என்னை அவர்அன்பு கொண்டதனாலேயே
இத்தனை யாகிநின்றார்
நின்னை மணந்திடுவார் மலரேஉந்தன்
நெஞ்சம் மகிழ்ந்திடடி
காற்று விரைந்தது காத்துக் கிடந்த பூ
கண்டு மலர்ந்துகொண்டாள்
ஊற்று என இரு உள்ளத்தில் இன்பமும்
ஓடிப் பெருகி வர
வேற்றுமை காணா விருவரும் காதலில்
வீழ்ந்து கிடந்தனராம்
ஈற்றில் மலர்மணம் கொண்டனன் காற்றென
ஊரில் அறிந்து கொண்டார்
கட்டியணைத்தவன் காற்றென்பதால்
காலை கட்டமுடியவில்லை
சொட்டு நேரமதில் சுற்றிச் சுழன்றவன்
சேதிகள் காணச் சென்றான்
வட்டமிட்டு அவன் வந்தபொழுதினில்
வண்ண மலரதுவோ
நெட்டுஇருந்தது பூஇல்லை மானிடர்
வெட்டி எடுத்துவிட்டார்
கோபமெடுத்தது காற்று பெரும்புயல்
கூவிச்சுழன்றடித்து
கோபுரம் கூரைகள் கொட்டில் கதவெனக்
கொண்டவை பிய்த்தெடுத்து
சாபமிட்டே மரம்வீழ்த்தி அழுதது
யாரடா சொல்லு என்று
பாவமிழைத்த மனிதரோ சொல்லினர்
பேய்க்குணம் காற்றுக்கென்று
0 comments:
Post a Comment