Pages

Monday 12 September 2011

கொள்ளை கொண்ட பைங்கிளி

நீள்விழியாள் என்நெஞ்சத் திருந்தவள்
நித்தம் உலாவருவாள்
ஆழ்மனதுள் வந்தே ஆசைக்கடை விரித்
தன்பை விலைக்கெடுத்தாள்
வேள்வியில் தீயிட்டு வைத்த மனத்தினை
வெண்பனிநீர் தெளித்தே
ஆழி அலைமேவும் ஆவேசத்தில் என்னை
அன்பினுள் மூழ்கடித்தாள்

தேவிஎன் எண்ணத்தில் சேர்ந்தே இருந்தொரு
தீபம் எடுத்து வைத்தாள்
ஆவி சிலிர்த்திட ஆக்கினை செய்தொரு
அன்பிற் கடிமை கொண்டாள்
கூவி ஒலித்திடும்வானக் குருவிபோல்
கொண்ட சுதந்திரத்தை
பாவிபறித்துமே பாதிநாள் தன்னுடை
பக்கமிருத்திவிட்டாள்

மேவி எழுந்திடும் மென்னிளம் பூக்களாய்
மெல்லியவாசமிட்டாள்
காவியமாய் கலைஓவியன் தூரிகை
காணா உருவெடுத்தாள்
வாவிமலர் தூங்கும் வண்டினையொத்த
விழிகளை மின்னலிட்டு
தாவிமலர் செல்லும்தன்மை கெடுத்தென்னை
தன்னில் நிறுத்தி வைத்தாள்

கார்முகில் போலெழும் கன்னங்கரி யதோர்
கூந்தலை தோள் விரித்து
வேரெழு மூங்கில் வியன் தரு மென்மைகொள்
வெண்மலர்க் கையசைத்து
தேரெனவே அசைந்தாடும் நளினத்தில
சித்திரமாய் நடந்து
பேரெனை பித்தனென்றாக்கிய வித்தகி
பெண்மைக்குக் காவலிட்டாள்

தேடி மலர் கொய்ய பூந்தளிர் தூங்கிடும்
சோலை அலைந்திருந்தேன்
வாடிக் கருகிடும் வண்ணமலர்பல
வீணில் பறித்துவந்தேன்
கூடிவிழிமலர் கொஞ்சிடும்தாமரை
கூந்தலில் பூஇருத்தி
கோடிமலர் கொண்ட மேனி மலர்களைக்
கொள்ளென கேலிசெய்தாள்

செவ்விளவானச் சிவப்பினிலே பல
சித்திர மேகங்களில்
எவ்வித மிங்கவள் எட்டிநிறமெடுத்
தீர்கன்னம் பூசிவைத்தாள்
கொவ்வை இதழ்கள் குலுங்க சிரித்தவள்
கொட்டிய புன்னகையில்
பவ்வியமோஇந்த காளைதனை ஓர்
பைங்கிளி வென்றுவிட்டாள்
********

வேள்வியில் தீசுட்டு வெந்தமனம்.-
பிரமச்சரியம்காத்த வெம்மையில் வாடிய மனம்

0 comments:

Post a Comment