Pages

Monday 12 September 2011

அவள் காதலை இவளிடம் சொல்லி..!

வண்ணமயில் ஆடுமதை வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம் கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன் கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும் திசைநடந்து சென்றேன்

பெண்ணவளோ என்மனதைப் கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம் பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள் துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற் திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல் மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து துரிதுநடை கொண்டேன்

மெல்ல விழும் அங்குமிங்கு மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ் முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே விண்ணிறங்கும் செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல் வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது? எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும் எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்\
மோதிஎன்னை காதலிட்டாள் மோகம்கொண்டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உதடுகளைநீவி

நல்லவர்கள் நாலுபேரின் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்று சொல்லி நின்றேன்

பெண்ணவளோ வெஞ்சினத்தை மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே என்று காதல்சொல்லிக்
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும் என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும் தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதை சிந்தைகொள்வதறிவேன்
சென்றுவிடும் என்னைத்தொடில் மெய்யிலுயிர் கொள்ளேன்

கண்ணிரண்டும் நீர்துளிக்க கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக் காலெடுத்துவைத்தாள்
விண்ணதிர இடியிடித்து வெளியிலோடிச்செல்ல
விழிமலரைமூட அவள் வேதனையைக்கண்டேன்
இன்னும் இனிவிட்டு வைத்தால் இந்தமாலைநேரம்
இன்பமன்றித் துன்பமென ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுக்கேதுமேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக் கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள் சக்களத்தி என்றாள்

0 comments:

Post a Comment